இளைஞர்களின் உணர்வு வெளிப்பாட்டையும் எழுச்சியையும் அடக்குவதற்கு அரசாங்கம் ஆயுதங்களையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தையுமே பயன்படுத்துமாக இருந்தால், இந்த நாட்டில் நல்லிணக்கம் பற்றிப் பேசுவது எவ்விதத்திலும் பயனற்றதாகும். அநுர அரசாங்கம் உண்மையிலேயே அமைதியையும் சமாதானத்தையும் விரும்பினால், முதலில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடுன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக்கொண்ட பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகரான சங்கீர்த்தன் (24) யாழ் சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அரச பயங்கரவாதத்தைப் பிரயோகித்து, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக்கோரி நேற்று சனிக்கிழமை (6) கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாகப் பெரும் திரளான இளைஞர், யுவதிகளின் பங்கேற்புடன் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமும், கண்டனப்பேரணியும் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த சிறிதரன் மேலும் கூறியதாவது:
இந்த மண்ணைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேஷ்குமார் சங்கீர்த்தன் ஒரு சிறந்த சொல்லிசைப் பாடகராவார். அவர் இந்த மண்ணினதும், மக்களினதும் கலாசாரம், வாழ்வியல் மற்றும் அவர்கள் அனுபவித்த அவலங்களைத் தனது பாடல் மூலம் வெளிக்கொணர்ந்த இளம் பாடகராவார். அந்த இளைஞனை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்திருக்கிறது.
சுமார் 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்தப் பயங்கரவாதத்தடைச்சட்டம் தமிழர்களை அழிப்பதற்காகவே மிக வஞ்சகமான முறையில் கொண்டுவரப்பட்டதொரு சட்டமாகும். இதனூடாகவே எமது மண்ணில் வாழும் தமிழ்மக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டார்கள்.
தற்போது அநுர அரசாங்கமும் இச்சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் பேசும் உரிமையை, பாடும் உரிமையை, கருத்துச் சுதந்திரத்தை முடக்குகின்ற உத்தியைத் தொடர்ந்து கைக்கொண்டு வருகிறது. இப்போது அரசாங்கம் மாறியிருக்கிறதே தவிர, அரசின் எதேச்சதிகாரப்போக்கும், சிங்கள பேரினவாதமும் மாறவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காண்பிக்கிறது.
இந்த மண்ணிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெளியேறியபோது, அவர்களை எமது மக்கள் கைகளைக் காட்டி மறித்து, போகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். அந்தக் காலப்பகுதியை இப்போதைய சம்பவங்கள் மீண்டும் நினைவுறுத்துகின்றன.
இங்கு எழுத்துரிமை பறிக்கப்படுகிறது. எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்கள் இன்னமும் சுங்கத்திணைக்களத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று தனது உணர்வுகளை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய சங்கீர்த்தன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இது மனித உரிமைகளுக்கும், மனிதாபிமானசட்டங்களுக்கும் முற்றியும் முரணானதாகும். இளைஞர்களின் உணர்வு வெளிப்பாட்டையும் எழுச்சியையும் அடக்குவதற்கு அரசாங்கம் ஆயுதங்களையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தையுமே பயன்படுத்துமாக இருந்தால், இந்த நாட்டில் நல்லிணக்கம் பற்றிப் பேசுவது எவ்விதத்திலும் பயனற்றதாகும்.
இந்நிலையில் அநுர அரசாங்கம் உண்மையிலேயே அமைதியையும் சமாதானத்தையும் விரும்பினால், முதலில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும். அச்சட்டத்தின் கீழ் நபர்களைக் கைதுசெய்வதை நிறுத்தவேண்டும். கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும். நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்றார்.




