உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்ய அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உத்தரவாத விலைகளின் கீழ் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 120 ரூபாவுக்கும், சம்பா நெல்லை 130 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல்லை 140 ரூபாவுக்கும் கொள்வனவு செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. மேலும், அரசாங்கத்துடன் இணைந்து இந்த உத்தரவாத விலைகளில் நெல்லைக் கொள்வனவு செய்ய ஆலை உரிமையாளர்கள் தயாராக இருப்பதாகவும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்தால் சந்தையில் அரிசி விலையைக் குறைக்க அவர்கள் உடன்பட்டுள்ளனர்.

இருப்பினும், நெல்லின் ஈரப்பதன் 14 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்திலேயே நாடு நெல்லை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என ஆலை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், இத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆலை உரிமையாளர்களால் சில முக்கிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பணயக் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடித்தல், களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லைப் பிணையாக வைத்து கூடுதல் கடன் வசதிகளை வழங்குதல் மற்றும் அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டத்துக்காக தனியார் களஞ்சியசாலைகளைப் பயன்படுத்த அனுமதித்தல் போன்ற முன்மொழிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, இன்னும் இரு வாரங்களில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகள்