எதிர்க்கட்சியில் இருக்கும்போதுதான் பீரிஸுக்கு நீதித்துறை சுதந்திரம், மனித உரிமைகள் தொடர்பில் நினைவுக்கு வரும்!

நீதிமன்றத்தின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி பற்றி தற்போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஜி.எல்.பீரிஸ் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டபோது நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசவில்லை. ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு சார்பாகவே செயற்பட்டார். எதிர்க்கட்சியில் இருக்கும்போது தான் இவருக்கு நீதித்துறை சுதந்திரம், மனித உரிமைகள் தொடர்பில் நினைவுக்கு வரும். பதவி வந்த பின்னர் கோமாவுக்கு சென்றுவிடுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து அரசாங்கம் நீதித்துறையை முடக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் யோசனை தொடர்பில் எதிர்க்கட்சியினர் தான் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தார்கள். முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எவ்வாறான அரசியல் கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறார் என்பது தெரியவில்லை.

நீதிமன்றத்தின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி பற்றி தற்போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஜி.எல்.பீரிஸ் 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை ராஜபக்‌ஷ குடும்பம் முறையற்ற வகையில் பதவி நீக்கியபோது ஜி.எல்.பீரிஸ் அதற்கு எதிராக ஒன்றும் பேசவில்லை. அரசாங்கத்துக்கு ஆதரவாகவே செயற்பட்டார். அப்போது நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் அவருக்கு சுய நினைவு இல்லாமலா இருந்தது என்று கேட்கிறோம்.

நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பில் 1.1 மில்லியன் அளவிலான வழக்குகள் நிலுவையில் காணப்படுகின்றன. வழக்கு விசாரணைகள் தாமதமடைவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நடுத்தர மக்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஜி.எல். பீரிஸுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அவர் எதிர்கட்சிகள் ஒவ்வொரு கூட்டணியமைக்கும் போது அந்த இடத்தில் அமர்ந்து ஊடக சந்திப்பை நடத்துவார், மறுநாள் பிறிதொரு அரசியல் கட்சி பக்கம் சென்று அங்கு ஊடக சந்திப்பை நடத்துவார்.இதுதான் அவரது தற்போதைய முழு நேர வேலை.

நீதித்துறையை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. வழக்கு விசாரணைகளுக்கு கடந்த காலங்களில் காணப்பட்ட தடைகள் நீக்கப்பட்டு, விசாரணைக்கான ஒத்துழைப்பு  அளிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் எதிர்க்கட்சியின் பல ஊழல் மோசடியாளர்களின் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுகிறது.இது எவ்வாறு நீதிமன்றத்தை பலவீனப்படுத்தும் செயலாக அமையும் என்றார்.