வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதற்கு ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமையானது 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தை மீறும் செயலாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, இதுகுறித்து சிறைச்சாலை அதிகாரிகள் அளித்த விளக்கத்தில் தமக்குத் திருப்தியில்லை எனத் தெரிவித்துள்ளது.
‘1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டமானது நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் முன்னறிவிப்பின்றி எந்நேரத்திலும் நுழைவதற்கு அதிகாரம் அளித்துள்ளது. அவ்வாறிருக்கையில் கடந்த 7ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதற்கு ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை இச்சட்டத்தை மீறும் செயல் என்பதுடன், மிகுந்த கரிசனைக்குரிய விடயமும் ஆகும்’ என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.டி.பி.தெஹிதெனிய தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (14) சிறைச்சாலை அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, சிறைச்சாலைக்குள் நிலவிய ஸ்திரமற்ற பாதுகாப்பு சூழ்நிலை காரணமாகவே ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் விளக்கமளித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேபோன்று மேற்படி சூழ்நிலை குறித்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அவ்வேளையில் உரியவாறு விளக்கமளிக்கத் தவறியமை குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் கவலை வெளியிட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாது என உறுதியளித்ததாகக் குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு, இருப்பினும் இந்த விளக்கமளிப்பு குறித்துத் தாம் திருப்தியடையவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கு எதிரான சித்திரவதைகள், மருத்துவ சிகிச்சை மறுப்பு, கைதிகள் மாற்றப்பட்ட இடங்களை அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்துவதைத் தாமதித்தமை, தண்டனைக்காலம் பூர்த்தியடைந்ததன் பின்னரும் கைதிகள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் கவலை வெளியிட்டுள்ளது.
மேலும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில், பொலிஸ் காவலின் கீழான சித்திரவதைகள் மற்றும் மரணங்கள் என்பன பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரவேசிப்பதற்கான அனுமதி உடனடியாக வழங்கப்படவேண்டும் என்றும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் தொடர்பான விபரங்கள் அவர்களது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்படவேண்டும் என்றும், தண்டனைக்காலத்தைப் பூர்த்திசெய்த கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.





