உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்ப்பதால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மீது ஆளும் தரப்பு அவதூறு பரப்புகிறது. ஒரு குறிப்பிட்ட நபரை மையமாகக் கொண்டு அரசியலமைப்பைத் திருத்த முயல்வது வங்குரோத்து அரசியலின் உச்சம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் அதன் தலைவர் ரஜிவ் அமரசூரிய ஆகியோர் மீது பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன் அவதூறுகளைச் சுமத்தியுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய மக்கள் சக்தியுடன் டீல் வைத்திருப்பதாகப் பாராளுமன்றத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் என்பது வரலாற்று ரீதியாகவே நாட்டின் சட்டத்தின் ஆட்சியையும், நீதித்துறையின் சுயாதீனத்தையும் பாதுகாக்க குரல் கொடுத்துவரும் ஒரு சுயாதீன அமைப்பாகும். கடந்த காலங்களில் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் எடுத்த தவறான முடிவுகளின் போதும் அந்த சங்கம் நீதியின் பக்கமே நின்றது.
அரசாங்கத்தின் தவறான முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்போது, அதற்குப் பதிலளிக்க முடியாத அரசாங்கம், அச்சங்கத்தின் தலைவர் மீது அரசியல் சேறுபூசுவது அதன் அரசியல் வங்குரோத்துத் தனத்தையே காட்டுகிறது. சட்டத்தரணிகள் சங்கத்துக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே எந்தவிதமான தனிப்பட்ட ஒப்பந்தங்களோ அல்லது கொடுக்கல் வாங்கல்களோ இல்லை.
வழக்குகள் தேங்கிக் கிடப்பதையும் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டி நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முயல்வது மிகவும் பலவீனமான வாதமாகும். வழக்குத் தாமதங்களைத் தவிர்க்கவேண்டுமானால் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கூடுதல் நீதிபதிகளை நியமித்தல் மற்றும் அரசாங்க ஆய்வாளர் அறிக்கை போன்ற தாமதங்களுக்குக் காரணமான கட்டமைப்புச் சார்ந்த குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டுமே தவிர, ஓய்வுபெறும் வயதை மட்டும் உயர்த்துவது தீர்வாகாது.
இது குறித்து ஆராய்ந்து முறையான தீர்வுகளை முன்வைக்கப் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த யோசனையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். அரசாங்கம் தற்போது ஒட்டுமொத்த நீதித்துறையின் நலனுக்காக அன்றி, ஒரு குறிப்பிட்ட நபரை மையமாகக் கொண்டு, தங்களது சுயநல அரசியல் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இந்த அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.
ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் ஒரு தனிநபரை மையப்படுத்தி அரசியலமைப்பைத் திருத்த முயன்றபோது, அது அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த வரலாற்றை நினைவூட்ட விரும்புகின்றோம். அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தையும் நீதித்துறை சுயாதீனத்தையும் சீர்குலைக்கக் கூடாது என்றார்.





