கட்டுபெத்தையில் தேசிய மின்னல் பாதுகாப்பு மையம் அமையவுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன அறிவிப்பு!

மொரட்டுவை, கட்டுபெத்தையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் “மின்னல் பாதுகாப்பு மற்றும் மின்னல் அபாயங்களிலிருந்து உங்கள் நிறுவனத்தைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பிலான ஒரு நாள் செயல்முறைப் பயிற்சிப் பட்டறையும் அதில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவும்  நேற்று (16) வியாழக்கிழமை மாலை (16) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இயற்கையின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான நிகழ்வுகளில் ஒன்றான மின்னல் தாக்கமானது, மனித உயிர்கள், கட்டடங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொடர்பு அமைப்புகள், மின்சாரக் கட்டமைப்பு மற்றும் நாட்டின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற பின்னணியில் இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் மின்னல் தாக்கத்தினால் சுமார் 50 பேர் உயிரிழப்பதுடன், இதனால் ஏற்படும் சொத்து மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களின் மதிப்பு ஆண்டுதோறும் சுமார் ஒரு பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக உணர்திறன் மிக்க மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால், இந்த மின்னல் அபாயத்தின் தாக்கம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்தத் தேசியத் தேவையைக் கருத்திற்கொண்டு, நவீன தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான இலங்கையின் முன்னணி நிறுவனமான ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம், நாட்டில் தேசிய மின்னல் பாதுகாப்பு மையம்  ஒன்றை நிறுவுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் முதற்படியாக, மின்னல் பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டது.

இப் பயிற்சிப் பட்டறையில் இலங்கை மற்றும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி மின்னல் மற்றும் மின்னல் பாதுகாப்பு விஞ்ஞானிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு மின்னல் பாதுகாப்பு அமைப்பு வடிவமைப்பு, அதி மின்னழுத்தப் பாதுகாப்பு, புவித்தொடுப்பு மற்றும் பிணைப்பு, மின்னல் ஆபத்து மதிப்பீடு, பரிசோதனை முறைகள் மற்றும் அமைப்புகளை சோதித்தல் மற்றும் புதிய தொழில்நுட்பப் போக்குகள் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பான தமது நடைமுறை அறிவை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன, இலங்கையில் தற்போது மின்னல் பாதுகாப்பு அமைப்புகளை சட்டப்பூர்வமாக முறைப்படுத்துவதற்கும், நிறுவப்பட்ட அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்கும் அல்லது அவற்றுக்கான உரிமங்களை  வழங்குவதற்கும் முறையானதொரு கட்டமைப்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தடையை நீக்குவதற்காகவே ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தினுள் “மின்னல் பாதுகாப்புக்கான தேசிய மையம்” நிறுவப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த மையத்தின் ஊடாக தரவுகளைச் சேகரித்தல், மின்னல் பாதுகாப்பு அமைப்புகள், மின்தேக்கிகள் (Capacitors) மற்றும் அலை எழுச்சிப் பாதுகாப்பு சாதனங்களை பரிசோதித்தல் போன்ற பல முக்கிய பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், புவி வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய வெப்பநிலை 1 செல்சியஸ் அதிகரிக்கும் போது, மின்னல் தாக்கும் வீதம் 12 சதவீதத்தால் அதிகரிப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் சில பகுதிகளில் கடந்த 20 வருடங்களுடன் ஒப்பிடுகையில் மின்னல் ஆபத்து 48 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக எச்சரித்தார்.

மொபைல் போன்கள் முதல் அனைத்து மின்னணு சாதனங்களும் இன்று மிகவும் உணர்திறன் மிக்கவையாக மாறியுள்ளதால், மின்னல் தாக்கத்தின் போது ஏற்படும் மின் கசிவுகள் மற்றும் தூண்டல்களால் (Induction) பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனிதர்கள் மட்டுமன்றி யானைகள் உள்ளிட்ட விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன. இந்த தேசியப் பேரழிவிலிருந்து சொத்துக்களையும் உயிர்களையும் பாதுகாக்க தேசிய மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பரந்த வேலைத்திட்டத்தின் ஒரு ஆரம்பக் கட்டமே இப்பயிற்சிப் பட்டறை என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

இப்பயிற்சிப் பட்டறையின் நிறைவில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சான்றிதழ் வழங்கும் விழாவில், ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன, முன்னாள் மேலதிக பிரதிப் பொது மேலாளர் அநுஷா வர்ணசூரிய, பொறியியலாளர் நுவான் குமாராசிங்க, இந்தியாவின் பொறியியலாளர் எஸ். கோபகுமார், இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதிப் பொது மேலாளர் பொறியியலாளர் கமல் இலேபெரும, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது மேலாளர் பொறியியலாளர் எல்.எஸ்.பி. கருணாரத்ன மற்றும் ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலாந்த சி. சபுமானகே உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்ததுடன் பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

சமீபத்திய செய்திகள்