மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவிற்கு செல்லும் சர்வதேச மாணவர்கள், கலாசார பரிமாற்றத் திட்ட பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருக்கக்கூடிய வீசா காலக்கெடுவை கடுமையாகக் குறைத்து, நிலையான ஒரு காலப்பகுதியை நிர்ணயிப்பதற்கான புதிய இறுதி விதியை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை வியாழக்கிழமை (16) வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரியில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதிாக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக்கப்பட்டு வரும் குடியேற்றக் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலம், குறிப்பிட்ட கல்வி அல்லது வேலைவாய்ப்பு முடியும் வரை அமெரிக்காவில் தங்கியிருக்க விசாக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் அவற்றுக்கு நிலையான உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்கள் மற்றும் கலாசார பரிமாற்றத் திட்டங்களில் வருவோருக்கான வீசா காலம் இனி அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்படும்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு இதுவரை பல ஆண்டுகள் வழங்கப்பட்டு வந்த வீசா காலம், இனி அதிகபட்சம் 240 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு இந்த வீசா காலம் 90 நாட்களாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையான காலப்பகுதிக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருக்க விரும்பும் வீசா தாரர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் வீசா நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய வேண்டும்.

அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என உள்நாட்டுப் பாதுகாப்புத் து தெரிவித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மாணவர் வீசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகமாகும். அத்துடன், 500,000-க்கும் அதிகமான பரிமாற்றப் பார்வையாளர்களும், 37,300 ஊடகவியலாளர்களும் 2024 நிதியாண்டில் வீசா பெற்றுள்ளனர்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்களைக் கண்காணிப்பது தங்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக  குறிப்பிட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பரிமாற்ற வீசாக்களில் வருபவர்கள் தங்களது வீசாக்களைப் பயன்படுத்திப் பல தசாப்தங்களாக அமெரிக்காவிலேயே தங்கியிருக்கும் பல உதாரணங்கள் உள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த புதிய இறுதி விதியானது பெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்ட 60 நாட்களில் நடைமுறைக்கு வரும். எனினும், இந்த நடைமுறை அமெரிக்க பாராளுமன்றத்தின் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்களின் தத்துவார்த்தக் கருத்துக்களைக் காரணம் காட்டி அவர்களின் வீசாக்கள் மற்றும் கிரீன் கார்ட்களை இரத்து செய்துள்ள நிலையிலும், இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பறித்துள்ள நிலையிலும் இந்த புதிய கட்டுப்பாடு சர்வதேச சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்