முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் வெள்ளிக்கிழமை (01) இராணுவ படைத்தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகியுள்ள நிலையில் இந்த போராட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் பொலிஸார் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த கேப்பாபிலவு மக்கள், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் துறைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்றைய தொழிலாளர் தினத்தன்று நடைபெறவுள்ள இந்த போராட்டமானது தங்கள் பூர்வீக நிலங்களை விடுவித்து தாயக மண்ணில் வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வலியுறுத்துகின்றனர்.
போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் பாதுகாப்பு செயலகம் என்ற பெயரில் மக்களின் காணிகள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 17 ஆண்டுகளாக தமது சொந்த நிலத்தில் குடியேற முடியாமல் தவித்து வருகிறோம். எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் எமது வளங்களை பயன்படுத்துகிறது.
ஆனால் நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். இது எந்த வகையிலும் நியாயமல்ல” என மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கேப்பாபிலவு மக்களின் பிரதான கோரிக்கை, அவர்களுக்கு சொந்தமான காணிகளை உடனடியாக விடுவித்து, தங்கள் மண்ணில் அமைதியாக வாழ வழிவகை செய்யப்பட வேண்டும் என்றனர்.








