திருகோணமலை – பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் விவசாயிகள் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (01) கறுப்பாடை அணிந்து, பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் திருகோணமலை கண்டி பிரதான வீதியின் முத்து நகர் சந்தியில் இடம் பெற்றது.
கடந்த பல வருடங்களாக தமது வயல்காணிக்களுக் கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியே இவ் விழிப்புணர்வுப் போராட்டத்தில் இடம்பெற்றது.
விவசாய காணிகளை சூரையாடி தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின்சார உற்பத்திக்காக வழங்கப்பட்டதை கண்டித்து தொழிலாளர் தினத்தை கரிநாளாக மாற்றி போராடினார்கள்.
எமது நிலம் எமக்கு வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், நலிவடைந்த உழவருக்கு IMF நீதி பெற்றுத்தா, முத்து நகர் விவசாய காணிகளை மீள தா போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கமத் தொழிலாளர்களின் விவசாய நிலங்களைப் பெற்றுத்தருமாறு கோரி சுமார் 50 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது,
இன்று மே 1 உலக தொழிலாளர்களின் உரிமையை வென்ற செந்நாள் ஆனால் இந்த தேசிய மக்கள் சக்தி அரசால் முத்துநகர் விவசாய தொழிலாளர்களின் உரிமையை காணியையும் பறித்த கருநாள்.
ஆசியாவிலேயே முதன்முறையாக இலங்கையில் ஆளுகை கண்டறியும் மதிப்பீட்டை (Governance Diagnostic Assessment) IMF நடத்தியது.
முறையான ஆளுகை இல்லாவிடில் பொருளாதார வளர்ச்சி நிலைக்காது என்பதை வலியுறுத்தி மேற்படி மதிப்பீடு நடைபெற்றது.
ஏனெனில் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புச் செயல்பாடுகளில் ஆளுகை (Governance) மற்றும் சமூக நிலைத்தன்மை (Social Stability) ஆகியவற்றுக்குச் சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கியத்துவம் அளித்துள்ளது.
பொருளாதாரப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு நாட்டில் சமூக மற்றும் அரசியல் சமநிலை அவசியம் என்று IMF குறிப்பிட்டது.
IMF தனது உத்தியோகபூர்வ 2023 ஆண்டு அறிக்கைகளில் பொருளாதாரக் காரணிகளுக்கே முன்னுரிமை அளிக்கும். எனினும், *அரசியல் மற்றும் சமூக நிலைத்தன்மை இல்லாமல் பொருளாதார இலக்குகளை அடைய முடியாது ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு முறையான சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை IMF தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.
மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் அரசாங்கம் தான் சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியும் IMF நம்புகிறது. ஆனால் இன்று நடப்பது இன்றைய அரசு பெரும்பான்மை காணியோடும் சிறும்பான்மை கண்ணீரோடு நடத்துகிறது.
முத்துநகர் சிறுபான்மை மக்களான நாங்கள் இந்த 55 வருட காலத்தில் சகல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளையும் பார்த்துள்ளோம்.
அவ்வளவு பேரும் எமக்கு எந்த வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை குறிப்பாக மகிந்தராஜபக்ச அவர்களின் ஆட்ச்சி காலத்தில் எமக்கு விவசாய மானியம் கிடைக்கபெற்றது ..
ஆனால் இந்த NPP அரசு தலையை தடவி கண்ணை பறித்து அவமானபடுத்தி அட்டூழியம் செய்து அராஜகமாக எங்களை எங்கள் பூர்வீக காணியில் இருந்து வெளியேற்றியது.
இதை விட கொடுமை முந்தைய அரசுகளுக்கு எதிராக எங்களை அருண் கேமச்சந்திரா போன்றவர்கள் தூண்டிவிட்டு நாங்கள் உங்களோடு ஏகாபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக இருக்கிறோம்.
உங்களுக்கு நில உரிமைப்பத்திரம் வாங்கித்தருகிறோம் என்று நம்பவைத்து நாடகமாடி இன்று ஆட்ச்சிக்கு வந்ததும். அதே ஏகாபத்தியத்திற்க்கு எங்கள் வயல்காணிகளை தாரைவார்க்கிறார்கள். அதாவது கண்ணை விற்று ஓவியம் வாங்குகிறது
அருண் கேமசந்திரா இன்று எங்கள் நில உரிமை போராட்டத்தை கொச்சப்படுத்தி பிழையான தகவல்களை மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கும் ,பிரதமருக்கும் தெரிவித்து வருகிறார்.
எங்களுக்கு எங்கள் பாரம்பரிய விவசாய நிலம் வேண்டும். அருண் கேமசந்திரா கந்தளாயில் 11000 ஏக்கர் அர காணியை பெரும்பகுதியை பெரும்பான்மை இன மக்களுக்கு வழங்கினார்.
அவர்கள் இனி விவசாயம் செய்ய என்று அதுவும் நாட்டின் வளர்ச்சிக்கு என்று சொல்லி அப்ப முத்துநகர் விவசாயிகள் என்ன 1200 ஏக்கரில் 55 வருடமாக கஞ்சாவா செய்தார்கள் .
பெரும்பான்மையைக்கு தரப்படும் அதே உரிமை சிறுபான்மைக்கு தரப்படும் என்று விதிக்கு வீதி சந்திக்கு சந்தி NPP சொன்னது அது பகல் கனவா.
எங்கே சமூக நிலைத்தன்மை உள்ளது. இன்று வரை சமூக வேறுபாட்டோடு தான் இந்த அரசு முந்தைய அரசுகளை விட ஏமாற்று நாடகத்தன்மையோடு பாசிசமாக செயல்படுகிறது..
நாங்கள் ஜனநாயக முறைப்படி பல தடவை பல வழிகளில் எங்கள் உரிமையை சொன்னோம் கேட்டபாடில்லை. ஆகவே கஸ்டத்தில் உள்ள இலங்கை நாட்டை காப்பாற்றுவது போல் கண்ணீரோடு மட்டும் வாழும் முத்துநகர் மக்களின் வாழ்க்கையையும் காப்பாற்றுங்கள்.
அரசு செய்யாததை IMF செய்யும் என்று முத்துநகர் மக்கள் முழுமையாக நம்புகிறார்கள் . காசாவுக்கும் பாலஸ்தீனத்துக்கும் ஈரானுக்கும் குரல் கொடுக்கும் உங்கள் நேர்மை பிடித்திருக்கிறது.
அதே போல் உங்களோடு வாழும் சகோதர சகோதரிகளான எமக்கும் கொஞ்சம் குரல் கொடுங்கள் எமக்கு நாளை உங்களுக்கு? எங்கள் ஒற்றுமையே எம் பலம் என்றனர்.








