தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க்கை மீண்டும் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுப்பதற்கு இலங்கையால் தலைமைத்துவத்தினை வழங்க முடியும் என்று இந்திய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இலக்கியவாதியுமான கலாநிதி.சசி தரூர் தெரிவித்தார்.
கொழும்பு இலக்கிய விழாவில் நேற்று முன்தினம் ‘கதைகளும் மாநிலங்களும்: புனைவும் புனைவல்லாததுமான தெற்காசிய அரசியல்’ எனும் தலைப்பிலான அமர்வு சாவித்ரி ரொட்ரிக்கோவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் செயற்பாடுகள் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படாது கிடப்பில் போடப்பட்டிருப்பது தொடர்பில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த உரையாடல் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னராகத்தான் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இங்கிருந்து வெளியேறியிருந்தார். அவர் இதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதை என்னுடைய இலகுவான பதிலாக குறிப்பிடலாம்.
உலகளாவிய ரீதியில் பார்க்கின்றபோது தெற்காசிய நாடுகள் மட்டும் தான் ஒருங்கிணைந்த நிலையில் உள்ளன. போக்குவரத்து, பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ஒருங்கிணைந்துள்ள ஒரேயொரு கட்டமைப்பு தெற்காசிய நாடுகளாகும். ஆகவே சார்க் அமைப்பினை செயற்படுத்துவது மிகவும் முக்கியமான விடயமாகும்.
ஆனால், பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இடைவெளிதான் சார்க் அமைப்பின் ஒருங்கிணைந்த செயற்பாட்டுக்கு முடியாது போயுள்ளது என்பது வெளிப்படையான விடயமாகும். குறிப்பாக பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அவர்கள் கோரும் இந்திய எல்லையை அவர்களுக்கு வழங்காத வரையில் சார்க் அமைப்பில் பங்கேற்பதில்லை என்பது தான் தெளிவான நிலைப்பாடாக உள்ளது. இதன்காரணமாக, பிரதமர் நரேந்திரமோடி, சார்க் அமைப்பின் செயற்பாடுகளை முழுமையாக கைவிட்டுச் செல்லும் தீர்மானத்துக்கு வந்துள்ளார்.
அதனையடுத்து பிரதமர் மோடி பிம்டெஸ்க் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு தயாராகியுள்ளார். அதேநேரம், ஆப்கானிஸ்தான், மியன்மார், மையப்படுத்திய உரையாடல்களும் நடைபெறுகின்றன.
நேபாளம், பங்களாதேஷ், மேற்கு வங்கத்தை மையப்படுத்தியும் சில சிந்தனைகள் உள்ளன. எவ்வாறாக இருந்தாலும், கலை,கலாசாரம், இலக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி சார்க் கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்ப முடியும்.
இந்தியா, பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்று கூறலாம், பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்ல முடியாது என்று கூறலாம். ஆனால் இலங்கை இந்தியாவையும், பாகிஸ்தானையும், நோபளத்தையும், பங்களாதேஷத்தையும் ஒன்றிணைக்கலாம். அரசியல் பொருளாதார விடயங்களை முன்னிலைப்படுத்தாது, கலை கலாசார ரீதியாக நாடுகளை ஒன்றிணைப்பது பொருத்தமானது. அதற்கான முயற்சிகளை இலங்கை முன்னின்று தலைமைத்துவம் வழங்க முடியும் என்பது எனது ஆலோசனையாகும் என்றார்.




