பெல்லன்வில பகுதியில் சனிக்கிழமை (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் என்றும், மற்றையவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர் இலங்கை இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்பதுடன், மின்னேரியா இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கித் திருட்டுச் சம்பவத்திலும் தொடர்புடைய சந்தேகநபர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பெல்லன்வில பகுதியிலுள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர், தனது உணவகத்தின் முன்னால் நின்று கொண்டிருந்த போது, நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் “கொஸ் மல்லி” எனப்படும் பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரின் உறவினர் எனக் கூறப்படும் நிலையில், எதிர்த்தரப்பு பாதாள உலகக் குழுவினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.




