16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே நிகழ்ந்த இரயில் விபத்தைத் தொடர்ந்து, ரயில் தண்டவாளத்திலிருந்து ஆணியை அகற்றியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து பொலிசார் பல பொருட்களைக் கண்டெடுத்துள்ளனர்.
அதன்படி, ரயில் தண்டவாளங்களை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் 3 இரும்பு நெம்புகோல்கள், சந்தேக நபர் வசித்து வந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், வனவாசலவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஆவார்.
பெலியகொட தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் மங்கள அஜித் உள்ளிட்ட குழுவினரால் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



