மாலைதீவில் கடலுக்கடியில் உள்ள குகைக்குள் சிக்கி 5 இத்தாலிய டைவிங் வீரர்கள் உயிரிழப்பு!

மாலைதீவின் வாவு அடோல் கடல் பகுதியில் ஸ்கூபா டைவிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினரின் முதற்கட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காணாமல் போன 5 வீரர்களில் ஒருவரது உடல் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளது.

“மீட்கப்பட்ட முதலாவது உடலானது கடலுக்கடியில் சுமார் 60 மீட்டர் (200 அடி) ஆழத்தில் அமைந்துள்ள ஒரு விசேட குகைக்குள்  இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஏனைய நான்கு டைவிங் வீரர்களின் உடல்களும் அதே குகைக்குள்ளேயே சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.”

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,

விபத்து நிகழ்ந்த வியாழக்கிழமையன்று வாவு அடோல் பகுதியில் வானிலை மிகவும் மோசமாகக் காணப்பட்டதாக மாலைதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடல் கொந்தளிப்பு காரணமாகப் பயணிகள் படகுகள் மற்றும் மீனவர்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காணாமல் போனவர்களின் உடல்களை மீட்பதற்காக மாலைதீவு கடலோர காவல்படையினர் இரவு முழுவதும் விசேட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதுடன், குகைக்குள் நுழைந்து தேடுவதற்கு மேலதிக முக்குளிப்பாளர்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாலைதீவில் இத்தகைய ஆழ்கடல் விபத்துகள் அரிதாகவே நடக்கும் என்றாலும், கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

உள்ளூர் ஊடகங்களின் தரவுகளின்படி, கடந்த 6 ஆண்டுகளில் மாலைதீவில் கடல் சார்ந்த விபத்துகளினால் 112 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 42 பேர் டைவிங் அல்லது ஸ்நோர்க்லிங்  விளையாட்டுகளின் போதே பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.