திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நிரந்தர அரச சேவைக்குள் உள்ளீர்க்க அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் செவ்வாய்க்கிழமை (5) கோரியது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் உலக தொழிலாளர் தினத்தை ஒட்டிய விசேட வேண்டுகோளாக ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் ஆகியோருக்கு இப்பகிரங்க கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதில் இவர் தெரிவித்துள்ளதாவது,
திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சமூகத்தில் மிக உயரிய பணியை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் மரணம் அடைந்தவர்களுக்கு மறுக்கப்படக்கூடிய நீதியை பெற்றுக் கொடுப்பது என்பது மகத்தானதும் மகிமைத்துவம் வாய்ந்ததுமான உன்னத சேவை ஆகும்.
அதேவேளை நீதிவான்களின் கடமை பளு குறைக்கப்பட்டு, நீதி பரிபாலனம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுவதில் திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பங்கும் பங்களிப்பும் அளப்பரியது.
திடீர் மரணங்களுக்கு தீர்ப்பு வழங்குகின்ற நீதிபதிகளான திடீர் மரண விசாரணை அதிகாரிகள் அடிப்படை மற்றும் மேலதிக கல்வித் தகைமை, உயரிய ஒழுக்கம், சமூக நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நீதி அமைச்சால் நியமனம் வழங்கப்படுகின்றனர்.
இவர்கள் வேறு எந்த அரசாங்க தொழிலும் இல்லாதவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டே உரிய நியமனத்தை பெறுகின்றனர். உயர் தொழில் தகைமையாளர்களாகவும், துறை சார்ந்த நிபுணர்களாகவும் கட்டமைக்கப்படுகின்றனர். இரவு, பகல் பாராமல் எந்த நேரத்திலும், எப்பொழுதும் இவர்களுடைய உயரிய சேவையை வழங்க வேண்டியவர்களாக உள்ளனர்.
ஆனால், இவர்களுடைய மகத்தான சேவைக்கு ஊக்குவிப்பு மற்றும் காகிதாதிகள் கொடுப்பனவுகளே வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் விடயத்தில் மிகச் சிறிய அளவிலான கொடுப்பனவுகளின் அதிகரிப்பு என்பது நகைப்புக்கு இடமான விடயமாகவே எம்மால் பார்க்கப்படுகிறது.
பண்டிகை கால ஊக்குவிப்புகள் கூட இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இவர்களுடைய வாழ்வியலும் வாழ்வாதாரமும் உண்மையில் சுமுக நிலையில் இல்லை என்பதே கசப்பான உண்மை ஆகும்.
பொற்சிறையில் வாடும் புனிதர்களான திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நிரந்தர அரச சேவைக்குள் உள்ளீர்க்க மக்களின் தோழர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும்.
இது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கவும் எமது தொழிற்சங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது.
நிரந்தர அரச சேவைக்குள் கிராம சேவையாளர் பதவி ஒரு காலத்தில் எவ்வாறு உள்வாங்கப்பட்டதோ அதேபோல திடீர் மரண விசாரணை அதிகாரி பதவியும் உள்ளீர்க்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.




