திறைச்சேரி மின்னஞ்சல் ஊடுருவல்: 2.5 மில்லியன் டொலர் மோசடி – சர்வதேச விசாரணை தீவிரம்

அவுஸ்ரேலிய கடன் வழங்குநருக்கு திறைச்சேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் 3 ஆம் தரப்பினரால் திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்புக்குள் ஊடுருவி மோசடி செய்யப்பட்டுள்ளது. நாடு கடந்த மோசடி என்பதால் இரகசியத்தன்மையை பாதுகாக்கும் பொருட்டு சகல தகவல்களையும் தற்போது வெளியிட முடியாது. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று திறைச்சேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.

சைபர் மோசடி என்பது இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல, மோசடி செய்யப்பட்ட 2.5 மில்லியன் டொலரை மீள அறவிடுவது குறித்து தற்போது உத்தவாதமளிக்க முடியாது.விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் எனவும் திறைச்சேரியின் செயலர் குறிப்பிட்டார்.

நிதியமைச்சின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது,

2022 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நாட்டையே பொறுப்பேற்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் செயற்றிட்டத்துக்கமைவாக பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதார நிலைமை தற்போது நிலைபேறான தன்மையில் காணப்படுகிறது.மொத்த தேசிய உற்பத்தியும் வளர்ச்சியடைந்த போக்கில் காணப்படுகிறது.

நிதி மறுசீரமைப்புக்கமைய இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,அரச கடன் முகாமைத்துவ சட்டத்துக்கமைய, அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு அரசமுறை கடன் செலுத்தலில் இருந்து மத்திய வங்கி விலக்கப்பட்டுள்ளது.South Asians & Diaspora

அரச கடன் முகாமைத்துவ சட்டத்துக்கமைய 2015.12.31 ஆம் திகதி முதல் வெளிநாட்டு அரசமுறை கடன் செலுத்தல் பொறுப்பினை நிதியமைச்சு ஏற்றுக்கொண்டது.

2026 ஜனவரி மாதம் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மீது சைபர் தாக்குதல் முயற்சி

2026 ஜனவரி மாதமளவில் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஒரு தரப்பினர் சைபர் தாக்குதலை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல் முழு கட்டமைப்புக்குள்ளும் ஒரு தரப்பினர் உள்நுழைய முயற்சிப்பதையும் அறிந்துக்கொண்டோம்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் சைபர் பிரிவு மற்றும் உரிய தரப்பினருக்கு அறிவுத்தினோம். இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

2025 இறுதி பகுதியில் 2.5 மில்லியன் டொலர் மோசடி

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பான பரீசிலனைகளைத் தொடர்ந்து முற்பட்ட காலப்பகுதியில் கொடுக்கல்கள் மற்றும் நிதி நிலைமை குறித்து ஆராயுமாறு நிதியமைச்சு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியது.

2025 இறுதிபகுதி மற்றும் 2026 ஜனவரி முதல் வார காலப்பகுதிகளில் கடன் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட அவுஸ்ரேலிய கடன் வழங்குநர்களுக்கு திறைசேரி ஊடாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் மின்னஞ்சல் கட்டமைப்புக்குள் மூன்றாம் தரப்பினரால் ஊடுருவி மோசடி செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்து பல தரப்பிலும் முறைப்பாடு.

இலங்கை அரசாங்கத்தால் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் கடன் வழங்குநர்களுக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் இடை தரப்பினரான 3 ஆம் தரப்பு மோசடி செய்துள்ளமை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கும், இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவுக்கும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் மேலதிக செயலாளர்கள் தலைமையில் குழு நியமனம்

இந்த நிதி மோசடி குறித்து வெளியக விசாரணைகளுக்காக முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதற்காக திறைசேரியின் மேலதிக செயலாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் பரிந்துரைக்கமைய திறைசேரியின் அதிகாரிகள் சிலருக்கு தாபன விதிக்கோவையின் பிரகாரம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கும் விடயங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இரகசியத்தன்மை பாதுகாப்பு

குறித்து மோசடி கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற நிலையில் அது குறித்து உள்ளக விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது. இது நாடு கடந்த மோசடி என்பதால் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டது.

அவுஸ்ரேலிய அரசாங்கத்துடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தை

அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் 3 ஆம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்;டமை குறித்து அவுஸ்ரேலிய அரசாங்கத்துடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த முறைகேடு குறித்து அவுஸ்ரேலிய அரசும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.குறித்த கடன்தொகை செலுத்தல் தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.இருப்பினும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்றார்.

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி மற்றும் திறைசேரி செயலாளர் வழங்கிய பதில் வருமாறு,

கேள்வி – அவுஸ்ரேலியாவின் கடன் வழங்குநரின் கணக்கிலக்கம் மற்றும் மின்னஞ்சல் தரவுகள் குறித்து சந்தேகம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி முன்கூட்டியதாகவே அறிவித்ததா ?

பதில் – விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதால் அது குறித்து பகிரங்கமாக குறிப்பிட முடியாது.

கேள்வி – அவ்வாறு குறிப்பிட முடியாது. எமக்கு தெரிந்த தகவல்களுக்கமைய இலங்கை மத்திய வங்கி இந்த விடயம் குறித்து முன்கூட்டியதாகவே அதாவது மோசடி இடம்பெறுவதற்கு முன்னரே அறிவித்துள்ளது.ஆனால் திறைசேரியால் அது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை ?

பதில் – இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தான் திறைசேரியில் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கேள்வி- இரண்டு நபர்களுக்கிடையில் பணம் வைப்பிலிடப்பட்டதும் தொலைபேசி உட்பட ஏதேனும் வழிமுறையில் வினவி குறித்த வைப்பு தொடர்பில் உறுதிப்படுத்தப்படும். ஆனால் அரசாங்கம் – அரசாங்கம் இடையிலான நிதி கொடுக்கல் வைப்பிலிடப்பட்டதும் அதனை உறுதிப்படுத்தவில்லையா,

பதில் – அவ்வாறு இல்லை இது வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல் என்பதால் புதிய முறைமை கையாளப்பட்டுள்ளது.

கேள்வி – அவ்வாறான புதிய முறைமை ஊடாகவா இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. இது திறைசேரியின் பொறுப்பற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது.

பதில் – இந்த மோசடி குறித்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் இடம்பெறுவதால் சகல விடயங்களையும் எம்மால் தற்போது பகிரங்கப்படுத்த முடியாது

கேள்வி – 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மீள அறவிடப்படுமா ?

பதில் – சைபர் நிதி மோசடி ஒன்று இடம்பெற்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே, 2.5 மில்லியன் டொலர் நிதியை மீள அறவிடுவது குறித்து தற்போது உத்தரவாதமளிக்க முடியாது. விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு அது குறித்து தீர்மானிக்கப்படும்.

சைபர் தாக்குதல் என்பது இலங்கைக்கு மாத்திரம் புதியதொன்றல்ல, இது முதல்முறை இடம்பெற்றதொரு சம்பவமுமல்ல,உலகளாவிய மட்டத்தில் இந்த தாக்குதலுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

கேள்வி – விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில் அதற்கு இடமளிக்கும் வகையில் தாங்கள் பதவி விலகுவீர்களா ?

பதில் – இந்த மோசடி குறித்து பலதரப்பட்ட வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே விசாரணை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றார்.