தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு முக்கிய பாடசாலைகளில் மாணவர்களிடையே காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருவதால், அந்தப் பாடசாலைகளை மேலும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய, காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய செயின்ட் மெத்யூஸ் இருமொழி மகா வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளும் நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளில் மாணவர்களிடையே காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முதற்கட்டமாக கடந்த 07 மற்றும் 8 ஆம் திகதிகளில் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. எனினும், நிலைமையைக் கண்காணித்த சுகாதார அதிகாரிகள் மற்றும் தென் மாகாண கல்விச் செயலாளர் என்.கே.ஆர். பத்திரண ஆகியோர் இணைந்து, காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த விடுமுறையை மேலும் நீடிக்க தீர்மானித்துள்ளனர்.





