மன்னார் – முள்ளிக்குளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று முன்னறிவித்தல் இன்றி சேவையில் ஈடுபடாமை மற்றும் பயணிகளுடன் குறித்த பேருந்தின் நடத்துனர் முரண்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, பேருந்து உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த தனியார் பேருந்து முன் அறிவிப்பு ஏதுமின்றி தனது சேவையை புறக்கணித்த மையால், அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் என பலரும் வீதியில் காத்திருந்து பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
அத்துடன், சேவை புறக்கணிப்பு தொடர்பில் கேள்வியெழுப்பிய பயணிகளுடன் குறித்த பேருந்தின் நடத்துனர் முறையற்ற விதத்தில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி முரண்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணிகளால் அதிகார சபைக்கு கொண்டுவரப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், போக்குவரத்து அதிகார சபை ஊடாக துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
விசாரணையின் முடிவில், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் விதிமுறைகளை மீறி, பயணிகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் சேவையை துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றங்களுக்காக குறித்த தனியார் பேருந்துக்கு 4,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
அத்துடன், இனிவரும் காலங்களில் பயணிகள் சேவையின் போது இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால், குறித்த பேருந்தின் சேவை அனுமதி பத்திரம் முற்றாக ரத்து செய்யப்படும் எனவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொதுப் போக்குவரத்தின் போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் முறைகேடுகள் இடம் பெற்றாலோ அல்லது அதிக கட்டணம் அறவிட பட்டாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாக தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்துகின்றது.





