தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால், அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக நிலைமைகள் தொடர்பாக நேற்றைய தினம் புதன்கிழமை (15) மாலை கலந்துரையாடப்பட்டது.
தையிட்டி காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

காணியினை அளவீடு செய்வதனால், காணிக்கான வரைபடத்தினை பெற்றுக்கொள்வதனால், காணிகளை உறுதிப்படுத்த அவை உதவியாக இருக்கும். தற்போது வரையில் 17 காணி உரிமையாளர்கள் தமது காணி உறுதிகளோடு இருந்தாலும், அவர்களின் காணிகளை அடையாளம் காண முடியாத நிலைமை காணப்படுகிறது.
காணிகளை அளவீடு செய்ய அனுமதிப்பதன் ஊடாக அவற்றுக்கான வரைபடங்களை பெற்றுக்கொள்ள முடியும். வரைப்படங்களின் அடிப்படையில் காணிகளை அடையாளம் கண்டு, தொடர்ந்தும் காணி விடுவிப்புக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.
அதேவேளை, காணிகளை அளவீடு செய்ய சம்மதித்தால், அதனைக் கொண்டு காணிகளை சுவீகரித்துவிடுவார்களோ என்ற நியாயமான சந்தேகம் காணி உரிமையாளர்களுக்கு இருப்பதனால், காணி அளவீடு செய்யும் பணிகளுக்கு அனுமதிக்கும்போது, “இந்த காணிகளை விடுவிக்கும் நோக்குக்காக மாத்திரமே காணிகளை அளவீடு செய்ய சம்மதிக்கிறோம். வேறு எந்த நோக்கங்களுக்காகவும் நாம் காணிகளை அளவீடு செய்ய சம்மதிக்கவில்லை” என தொனிப்பட சட்டத்தரணிகள் மூலம் சம்மத கடிதங்களை நில அளவை திணைக்களத்திற்கு சமர்ப்பித்த பின்னர், காணிகளை அளவீடு செய்ய அனுமதித்தால், பிற்காலத்தில் காணிகளை சுவீகரிக்க முயன்றால், சட்டப் போராட்டங்களையும் நடாத்த முடியும் என பெரும்பாலோனோர் கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில்,
இதேவேளை, இலங்கையின் நீதித்துறையை, சட்டங்களை நாம் நம்பி நம்பி ஏமாந்துபோயுள்ளோம். நீராவியடி பிள்ளையார் கோவிலடியில் பிக்குவின் உடலை தகனம் செய்ய நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. அதனை மீறியும் உடல் தகனம் செய்யப்பட்டது.
குருந்தூர் மலையில் கட்டுமானத்தை நிறுத்தச் சொல்லி தடை உத்தரவு வழங்கப்பட்டது. அதனையும் மீறி விகாரை கட்டப்பட்டது மாத்திரமின்றி, தடை உத்தரவு பிறப்பித்த நீதிபதிக்கு அழுத்தங்களை கொடுத்தமையால், அவர் நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறான நிலையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய சம்மதித்தால், அதனை சுவீகரிப்புக்கான முதல் படியாக கொண்டு, எதிர்காலத்தில் இவ்வளவு காணிகளும் தையிட்டி விகாரைக்கு என வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இலகுவாக காணிகளை சுவீகரித்துக்கொள்வார்கள்.
எந்தவொரு இடத்திலும், காணிகளை அளந்து விடுவிக்கவில்லை. அவர்கள் காணிகளை விடுவிக்கட்டும், காணி உரிமையாளர்கள் அளந்து தமது காணிகளை எல்லைப்படுத்திக்கொள்வார்கள்.
காணிகளை அளந்துதான் விடுவிப்போம் என சொல்வதில் ஏதோ மர்மம் இருக்கிறது.

அதேநேரம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளில் 17 பேரே காணி உறுதிகளோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் சிலரிடம் உறுதிகள் இல்லாமலும், காணி உரிமையாளர்களை அடையாளம் தெரியாமலும் இருக்கிறது. அவ்வாறான காணிகளை ‘உரிமை கோரப்படாத காணிகள்’ என அரசாங்கம் சுவீகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே நாம் காணிகளை அளவீடு செய்ய சம்மதிக்காமல், விகாரையை முற்றாக அகற்று என தொடர்ந்து போராடி விகாரையை அகற்ற வைக்க வேண்டும்.
காணிகளை அளவீடு செய்து சிலரின் காணிகளை மாத்திரம் விடுவித்து ஏனைய காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் கூட அவர்களுக்கு இருக்கலாம். எனவே நாம் தொடர்ந்து விகாரையை அகற்று எமது காணிகளை விடுவி என போராடுவதே சிறந்தது என கருத்து தெரிவித்தனர்.
இறுதியில் காணிகளை அளவீடு செய்ய சம்மதிப்பதா? இல்லையா என்ற எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், கூட்டம் நிறைவடைந்துள்ளது.
குறித்த காணிகளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், காணிகளை அளவீடு செய்ய சம்மதிப்பதா, இல்லையா என்ற முடிவுக்கு காணி உரிமையாளர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







