தமக்கு தேவையான வகையில் வழக்கின் தீர்ப்பினை எழுதிக் கொள்வதற்காகவே அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.இச்செயற்பாடு ஜனநாயகத்துக்கு விழும் மரண அடியாகவே கருதப்படும். நாட்டு மக்கள் அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அழைப்பு விடுத்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் டெங்கு நோய் மிகவும் தீவிரமாக பரவுகிறது. ஜனவரி மாதம் முதல் இன்றுவரையான காலப்பகுதியில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் வரை இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
உள்ளுராட்சி மன்ற நிர்வாகத்தின் தோல்வியே டெங்கு நோய் தீவிரமடைவதற்கு பிரதான காரணியாக காணப்படுகிறது. பிரதான தலைநகரமான கொழும்பு நகரம் இன்று கழிவகற்றல் பிரச்சினையால் அசுத்தமடைந்துள்ளது. பிரதான நகரங்களின் வீதிகளில் குப்பை மேடுகள் உருவாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் டெங்கு மற்றும் கொவிட் பெருந்தொற்கு சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆகவே டெங்கு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெற வேண்டும்.
அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் மர்மமான முறையில் உயிரிழக்கும் அச்சுறுத்தலான சூழல் இன்று காணப்படுகிறது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான ரங்க திஸாநாயக்க மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நந்தன குணதிலக, கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்தார்கள்.
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதான சாட்சியாளராக இருந்த ரங்க நிசாந்த ராஜபக்ஷ மர்மமான முறையில் உயிரிழந்தார்.இந்த மரணங்கள் தொடர்பில் இதுவரையில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.தற்போது முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறான பல பிரச்சினைகள் காணப்படுகின்ற பின்னணியில் அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.இது முற்றிலும் தவறானது.தமக்கு தேவையான வகையில் வழக்கின் தீர்ப்பினை எழுதிக் கொள்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறு முயற்சிக்கிறது.
நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது ஜனநாயகத்துக்கு விழும் மரண அடியாகவே கருதப்படும். நாட்டு மக்கள் அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம் என்றார்.



