நெல்லுக்கு அதிக விலையால் நுகர்வோரே அதிகம் பாதிப்பு – அசேல சம்பத் கவலை!

விவசாயிகளின் நெல்லுக்கு நல்ல விலை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முற்படுவதன் இறுதிப் பாதிப்பை நுகர்வோரே சுமக்க வேண்டியுள்ளதால், விவசாயிகள் பிரச்சினையை விட நுகர்வோருக்கே அதிகம் பாதிப்பு ஏற்படுவதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் விசனம் வெளியிட்டுள்ளார்.

தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

விவசாயிகளின் நெல்லுக்கு நல்ல விலை பெற்றுக்கொடுக்க முற்படுவதன் இறுதிப் பாதிப்பை நுகர்வோரே சுமக்க வேண்டியுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது தேவைக்கு மாத்திரம் நெல் உற்பத்தி செய்ய வேண்டுமே தவிர, நுகர்வோருக்காக உற்பத்தி செய்யத் தேவையில்லை.

எமக்கு வர்த்தக அமைச்சர் ஒருவர் இருக்கின்றார், அவர் தேவையான நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வார். இன்று விவசாயிகளாகிய நாமும் கூட கடையிலிருந்தே அரிசியை வாங்கி உண்கிறோம். எனவே, வீழ்ச்சியடைந்துள்ள இந்த விவசாயத் துறையைத் தூக்கி நிறுத்தப் போராடுவதில் எந்தப் பயனும் இல்லை.

தற்போதைய சூழ்நிலையில், மக்களின் போஷாக்குக்கு அத்தியாவசியமான முட்டை, நெத்தலி மற்றும் கருவாடு ஆகியவற்றின் விலைகள் அசுர வேகத்தில் அதிகரித்துள்ளன. கோழித் தீவனமாகப் பயன்படுத்தப்படும் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படாமையே முட்டை விலை உயர்வுக்குக் காரணமாகும்.

இன்று சிறிய முட்டை ஒன்று 40 ரூபாவாகவும், பெரிய முட்டை ஒன்று 45 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு இந்த விவகாரங்கள் தெரியாதா?

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு நெத்தலி கிலோவொன்று 2000 ரூபாவாகவும், கருவாடு கிலோவொன்று 3000 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது. இன்று 10 கிராம் நெத்தலியைத் தராசில் வைத்தால் வெறும் 10 நெத்தலித் துண்டுகளே வருகின்றன. இறக்குமதியின் போது கப்பல் கட்டணங்கள் மற்றும் வரிகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும். அதேபோல், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உள்நாட்டில் கருவாடு உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது.

உள்நாட்டு உற்பத்திறன் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக இனி இந்த நாட்டை உள்நாட்டு விவசாயத்தால் மாத்திரம் கட்டியெழுப்ப முடியாது. தற்காலத்தில் விவசாயம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் விதைகள் தரமற்றவையாக உள்ளதால் போதிய அறுவடை கிடைப்பதில்லை. விவசாயத் துறையில் கடுமையான தொழிலாளர் தட்டுப்பாடு நிலவுவதால் இதற்கு நவீன இயந்திரமயமாக்கல் அவசியமாகும்.

அதுவரை நுகர்வோரைக் காக்கும் பொருட்டு, அரிசி, முட்டைத் தீவனம் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும். நுகர்வோர் விவகார அதிகார சபையும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களும் உடனடியாக இப்பிரச்சினைகளில் தலையிட்டு நுகர்வோருக்கு நியாயமான விலையில் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.