தித்வா புயல் தாக்கம், மத்திய கிழக்கு நாடுகளின் மோதல்கள் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றமடைந்துள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் வீண் அச்சத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் அமைச்சருமான அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 3,476,664 மில்லியன் ரூபாவிலிருந்து, 3,652,503 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமானது 2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 5.1 சதவீதம் பதிவாகியுள்ளது.
2026 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் விவசாயச் செயற்பாடுகள் 1.1 சதவீத வளர்ச்சியையும், கைத்தொழிற்துறைச் செயற்பாடுகள் 7.2 சதவீத வளர்ச்சியையும், சேவைத் துறைச் செயற்பாடுகள் 3.4 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 54.2 சதவீதம் சேவைத்துறையும், 27.2 தொழிற்றுறையும், 11.3 சதவீதம் பொருட்கள் மீதான வரிகள் மானியங்கள் நீங்கலாக, 7.3 விவசாயத்துறை பங்களிப்புச் செய்துள்ளன.
தித்வா புயல் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கின் மோதல் நிலைமையால் ஏற்பட்ட சவால்களை முகாமைத்துவம் செய்துக் கொண்டு தான் இந்த முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் நாட்டின் நிதி முகாமைத்துவம் பலவீனமடையும் என்று எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.
2022 ஆம் ஆண்டு பொருளாதார நிலைமை இனியொருபோதும் ஏற்படாது. மத்திய கிழக்கின் மோதல் நிலைமை முடிவுறும் நிலையில் காணப்படுகிறது. ஆகவே எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைவடையும் சாத்தியம் காணப்படுகிறது. அதன் பயனை நாட்டு மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என்றார்.





