மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை 3 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இவரை அடையாளம் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வாவியை அண்டிய பகுதியில் உள்ள மரத்தின் கீழ், 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை நடத்தியபோதும் உயிரிழந்தவரை அடையாளம் காண முடியவில்லை.
இந்நிலையில், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவரை அடையாளம் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



