யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கணிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 25 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்புச் செய்வதற்கான அளவீட்டு நடவடிக்கை வியாழக்கிழமை (09.07.2026) முன்னெடுக்கப்படவுள்ளது. இந் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரையும் ஒன்றுதிரளுமாறு வடமாகாணக் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (07.07.2026) யாழ்.வடமராட்சி கிழக்குப் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். மக்களின் காணிகளை அபகரிப்பதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போதைய அரசாங்கம் மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படுமெனத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. எனினும், இதுவரை எந்தக் காணிகளும் விடுவிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.





