மலையக மே தின கூட்டத்தில் ஜனாதிபதி அநுர கலந்துக் கொள்வார்!- டில்வின் சில்வா

எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை  கருத்திற் கொண்டு இந்த முறை 21 மாவட்டங்களில் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளோம். மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் நுவரெலியா  மாவட்டத்தில் நடைபெறும் மே தின கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துக் கொள்வார். அதேபோல் கொழும்பில் நடைபெறும் கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துக் கொள்வார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில்  புதன்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தொழிலாளர்களின் உரிமை மற்றும் உரிமைக்கான போராட்டம் என்பவற்றை முன்னிலைப்படுத்தியே நாங்கள் இதுவரை காலமும் செயற்பட்டோம். ஜனநாயக போராட்டத்தின் ஊடாகவே ஆட்சிக்கு வந்தோம்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை (மே 01) கடந்த ஆண்டு கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் பெருமளவிலானோரின் பங்குப்பற்றலுடன் கொண்டாடினோம்.மத்திய கிழக்கு மோதல் நிலைமை காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை  நாங்கள் பின்பற்றுகிறோம்.இதற்கமைய இந்த முறை பிரதான கூட்டத்தை நடத்தாமல் 21 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் நடைபெறும் மே தின கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துக் கொள்வார்.அதேபோல் கொழும்பில் நடைபெறும் கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துக் கொள்வார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மே தின கூட்டத்தை சிறப்பாக நடத்தவுள்ளோம்.

மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் இன்று மக்களாட்சி அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள். மக்களாட்சியின் பலத்தை உறுதிப்படுத்தும் வகையில் இம்முறை மக்கள் ஆட்சிக்கு பலம் என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை மே தினத்தைக் கொண்டாடவுள்ளோம் என்றார்.