மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகம் – லிட்ரோ நிறுவனம் உறுதி

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம்  தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைக்கவுள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த எரிவாயு கையிருப்புகள் தற்போது மாலைதீவில் உள்ள மிதக்கும் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, மேலும் 20,000 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் தென்னாப்பிரிக்கா ஊடாக மாலைதீவை நோக்கி வந்துகொண்டிருப்பதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி இந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப தேவையான எரிவாயு தொகையை சந்தைக்கு விநியோகித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.

அத்துடன், பண்டிகைக் காலத்தின் பின்னரும் சந்தைக்குத் தேவையான எரிவாயுவை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் பணிகள் மற்றும் விநியோக நடவடிக்கைகள் மீண்டும் வழமை போல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.