மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட முனையத்தில், சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் சர்வதேச சுகாதாரப் பணிப்பாளர் அனில் சமரநாயக்க மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர், இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அத்துடன், இலங்கையின் ஆரம்ப சுகாதாரச் சேவையை மேம்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை சுகாதாரத் துறையில் புகுத்துவது குறித்து இந்த விஜயத்தின்போது விரிவாக ஆராயப்பட்டது.
இத்தூதுக்குழுவினர் இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவு, புதிய வெளிநோயாளர் பிரிவு மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை அவதானித்தனர்.
மேலும், இந்த விஜயத்தின் போது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல், மருத்துவ நிபுணர்களுக்கான மேலதிக பயிற்சிகள், கல்விசார் ஒத்துழைப்புகள், ஆயுர்வேத மருத்துவம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




