வட,கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மே தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு

இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி என்பன உள்ளடங்கலாக தமிழ்த்தேசியக் கட்சிகளின் மேதினக் கூட்டங்கள் இன்றைய தினம்  வட, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறவுள்ளன.

அதற்கமைய இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் ‘தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்’ எனும் மகுடத்தில் வடக்கில் மாங்குளம் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் பி.ப 3.30 மணிக்கும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் பட்டிப்பளை வைரவர் விளையாட்டுக்கழக மைதானத்தில் பி.ப 2.00 மணிக்கும் மேதினக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பேரவையின் மேதினக்கூட்டம் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் பி.ப 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொ.ஐங்கரநேசன், ந.சிறிகாந்தா, க.அருந்தவபாலன் மற்றும் கே.வி.தவராசா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

அதேவேளை யாழ்ப்பாணம் இணுவிலில் அமைந்துள்ள ஜொலி ஹோட்டலில் பி.ப 4 மணிக்கு நடைபெறவுள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மேதினக்கூட்டத்தில் கூட்டணியின் பொதுச்செயலாளர் மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றுவர்.

மேலும் சமத்துவக்கட்சியின் மேதின நிகழ்வு முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் பி.ப 3 மணிக்கு அக்கட்சியின் தலைவர் மு.சந்திரகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.