“அஞ்சாமை கொண்ட இளைஞர்களே…” – சிஜேபிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

“விழிப்புணர்வும் அஞ்சாமையும் கொண்ட இளைஞர்களே எந்த ஜனநாயகத்துக்கும் வலிமையான அடித்தளம்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய அரசு சார்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையை நடத்தினர். சிஜேபி சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேற்று (ஜூலை 24) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் எனும் மூன்று கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சிஜேபி பிரதிநிதிகள் மத்திய அமைச்சர்களிடம் அளித்தனர்.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட உடன்பாட்டுக்கு இணங்க, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் தெரிவித்தார்.

சிஜேபி போராட்ட வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ”இந்தியாவின் உழவர்கள் முதலில் சாதித்துக் காட்டினார்கள். நாடு முழுதும் களத்திலும் இணையத்திலும் தங்களது உரிமைகளுக்காகப் போராடி இந்த வெற்றியைப் பெற்றுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்!

அதேவேளையில், தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் முற்றல்ல; மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தது போல ‘நீட்’டையும் ஒழிப்போம்!

பொய்யான பரப்புரைகளாலும், வெற்று வாக்குறுதிகளாலும் இளைஞர்களைத் திசை திருப்பலாம் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே வடிவமைக்கத் தீர்மானித்திருக்கும் தலைமுறையின் தெளிவையும், துணிவையும், உணர்வையும் அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

கேள்வி கேட்கவும், அரசியலில் பங்கேற்கவும், அநீதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கவும் இந்த எழுச்சி ஒரு தலைமுறைக்கு ஊக்கமளிக்கட்டும். விழிப்புணர்வும் அஞ்சாமையும் கொண்ட இளைஞர்களே எந்த ஜனநாயகத்துக்கு வலிமையான அடித்தளம்” என்று தெரிவித்துள்ளார்.