அமெரிக்காவில் தீ விபத்து : 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில்  6 சிறுவர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லேக் மிச்சிகனின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ‘கிராண்ட் ஹேவன்’ (Grand Haven Township) நகர்ப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் வெள்ளிக்கிழமை (24) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் சிலரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த  வெள்ளிக்கிழமை  வீட்டிற்குள் தீப்பற்றியதாக வந்த தகவலையடுத்து, அந்நாட்டு தீயணைப்பு பிரிவு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டிற்குள் சோதனையிட்டபோது 8 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் 5 வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்-சிறுமியினர் என அடையாம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த அனைவரின் விவரங்களும் முழுமையாக இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை எனவும்  இது ஒரு  கொலை மற்றும் தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தத் தீ விபத்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாகவும், திட்டமிட்டே தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான துல்லியமான காரணங்களைக் கண்டறிய மிச்சிகன் மாநிலக் தீயணைப்பு விசாரணைப் பிரிவினர்  ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.