உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றச் சூழல் காரணமாகவும், ஹார்முஸ் நீரிணை வழியான வணிகக் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாலும், உலகளாவிய உர விநியோகச் சங்கிலியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து உரத்தை இறக்குமதி செய்வது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. டய்-அமோனியம் பாஸ்பேட்டுக்கு 60 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதியை சார்ந்திருக்கிறோம். பொட்டாஷுக்கு ஏறக்குறைய முழுமையாக இறக்குமதியையே நம்பி உள்ளோம்.
உள்நாட்டிலும், மத்திய அரசு உர உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. போர் சூழலை அறிந்து, வேளாண் உற்பத்திக்குத் தேவையான உரங்களை கணக்கிட்டு இறக்குமதி செய்ய உரிய நடவடிக்கையை காலத்தில் எடுத்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.
இதனால், முக்கிய உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மோனோ-அமோனியம் பாஸ்பேட், மோனோ-பொட்டாசியம் பாஸ்பேட், எஸ்ஓபி மற்றும் தண்ணீரில் கரையும் உரங்கள் போன்ற முக்கியப் பொருட்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இந்த விலையேற்றத்துக்குஇந்தியாவில் உர உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களும் முக்கியக் காரணமாகும். இந்திய வேளாண்மை உற்பத்திக்கு அவசியமான உரங்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைப் போக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், போதிய விளைச்சலின்றி விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, உணவுத் தட்டுப்பாடும் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டு உரங்களை போதிய அளவில் இறக்குமதி செய்யவும், விலை ஏற்றத்தை ரத்து செய்யவும், விலை ஏற்றத்தை ஈடு செய்யும் வகையில் உரிய நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





