கிட்னி திருட்டு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

‘கிட்னி திருட்டு வழக்​கில் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். அறவழி போராட்​டங்​களுக்கு தமிழக அரசு எதி​ராக இருக்​காது’ என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார்.

சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள தேசிய நல்​வாழ்வு குழும அலு​வல​கத்​தில் நடை​பெற்ற நிகழ்​வில் பங்​கேற்ற சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ், எச்​டிஎஃப்சி வங்​கி​யின் சிஎஸ்​ஆர் நிதி​யில் ரூ.7.70 கோடி​யில் 11 அரசு தலைமை மருத்​து​வ​மனை​களில் அமைக்​கப்​பட்​டுள்ள 10 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு​களைத் தொடங்கி வைத்​தார்.

சுகா​தா​ரத்​துறை செயலர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அனீஷ் சேகர், பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்​குநர் சோமசுந்​தரம், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் இயக்​குநர் ராஜ்மோகன், எச்​டிஎஃப்சி வங்​கி​யின் துணை தலை​வர் என்​.பிரேம் ஆனந்த் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

அப்​போது, அமைச்​சர் அருண்​ராஜ் பேசி​ய​தாவது: எச்​டிஎஃப்சி வங்​கி​யின் சிஎஸ்​ஆர் நிதி​யின் கீழ் ரூ.7.70 கோடி​யில் 11 அரசு தலைமை மருத்​து​வ​மனை​களில் 10 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு தற்​போது பொது​மக்​களின் பயன்​பாட்​டுக்கு தொடங்கி வைக்​கப்​பட்​டுள்​ளது.

அரசு மருத்​து​வ​மனை​களில் கட்​டமைப்பை மேம்​படுத்த, அனைத்து தொழில் நிறு​வனங்​கள் மற்​றும் தன்​னார்​வலர்​கள் சிஎஸ்​ஆர் நிதி, இதர நன்​கொடைகளை வழங்க வேண்​டும். கிட்னி திருட்டு தொடர்​பாக வெளிப்​படை​யான விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்​டு, தற்​போது நாமக்​கல் மாவட்ட குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் மருத்​து​வ​மனை மற்​றும் மருத்​து​வர்​கள்மீது வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு மருத்​துவ கவுன்​சில் மூலம் சம்​பந்​தப்​பட்ட மருத்​து​வர்​களின் மீது நடவடிக்​கைக்கு பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது. கிட்னி திருட்டு வழக்​கில், எந்த ஒரு தலை​யீடும் இல்​லாமல் சட்​டத்​துக்கு உட்​பட்டு நியாய​மான நடவடிக்கை எடுக்​கப்​படும்.