சவூதி அரேபியா வழியாக இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நடுவழியிலேயே திரும்பிச் சென்றன.
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடல் மற்றும் பாப்-எல்-மந்தீப் ஜலசந்தி வழியே செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் மட்டுமின்றி, சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதைகளையும் முடக்கும் வகையில் தங்களின் தாக்குதல் எல்லைகளை அவர்கள் விரிவுபடுத்தியுள்ளனர்.
இந்த நிலையில்தான், இந்தியாவை நோக்கி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை ஏற்றி வந்த 2 முக்கிய வணிகக் கப்பல்கள், செங்கடலின் ஆபத்தான பகுதியை நெருங்கியபோது ஹவுதி அமைப்பின் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைச் செய்தி அவற்றுக்கு கிடைத்தது.
சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் உறுதியானதையடுத்து, கப்பல் மாலுமிகள் மற்றும் உரிமையாளர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பாதையை மாற்றி புறப்பட்ட இடத்திற்கே ‘யு-டர்ன்’ அடித்துத் திரும்பிச் செல்ல முடிவெடுத்தன.
வழக்கமாக செங்கடல் வழியாக வரும் கப்பல்கள், ஹவுதி கிளர்ச்சியளர்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்பிரிக்க கண்டத்தைச் சுற்றி (நன்னம்பிக்கை முனை வழியே) செல்லும் நீண்ட பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.





