டாஸ்மாக் முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு முன்ஜாமீன் வழங்கியது.
விசாரணைக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்ற நீதிபதி வி.மோகனா, செந்தில் பாலாஜியின் மனுவை விசாரிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
இதையடுத்து, வழக்கின் அவசரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு பிற்பகல் 1 மணிக்கு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கில், செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருந்தது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால், அவரது மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் நீதிபதி சூர்யாகாந்த் தலைமையிலான அமர்விடம் கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி விசாரணையின் போக்கை அல்லது தன்மையை செல்வாக்கு செலுத்தி மாற்றியமைப்பார் என்று மாநில அரசு கவலைப்படத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
மேலும், செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்து, அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.




