ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் சாதம், பிரியாணி, பிரைடு ரைஸ், இட்லி, தோசை, புட்டு என அரிசி உணவு அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. மேலும், அதிரசம், முறுக்கு, கொழுக்கட்டை, பனியாரம் போன்ற தின்பண்டங்களும் அரிசியில் செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக படிப்படியாக அரிசி விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.65-க்கு விற்கப்பட்ட பொன்னி அரிசி தற்போது கிலோ ரூ.80 ஆகவும், பாபட்லா, ஆர்என்ஆர் ரக அரிசி ரூ.55-லிருந்து ரூ.70 ஆகவும், சீரக சம்பா ரூ.120-லிருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி, பார்வதி அரிசி கடை வியாபாரி பாலசண்முகம் கூறியதாவது: தமிழகத்தின் அரிசி தேவையை ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.
தமிழக அரிசி பெரும்பாலும் பொதுவிநியோகத்துக்கு சென்றுவிடுகிறது. குறைந்த அளவே தமிழகத்தில் விற்கப்படுகிறது. இதற்கிடையே, பருவமழை குறைவு, வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது.
இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ அரிசி ரூ.10 முதல் ரூ.15 வரையும், 25 கிலோ மூட்டைக்கு ரூ.250 முதல் ரூ.375 வரையும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, களம்பூர் நெல், அரிசி வியாபாரிகள் சங்க கவுரவத் தலைவர் ராம் மணி கூறும்போது, “கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை சிறப்பாக இல்லை. அதனால் நெல் விளைச்சல் குறைந்துள்ளது.
100 மூட்டை விளைவித்த விவசாயி, இப்போது 20 மூட்டைதான் விளைவிக்கிறார். 2 மாதத்துக்கு முன்பு ஒரு மூட்டை நெல் ரூ.1,700-க்கு கிடைத்தது.
பற்றாக்குறையால் இப்போது ரூ.2,200 முதல் 2,400 வரை உயர்ந்துள்ளது. அதனால் அரிசி விலையும் உயர்ந்துவிடுகிறது. அடுத்த மாதம் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது” என்றார்.





