பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து விசிக மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் நேற்று வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும். உணவகங்கள், சிறு தொழில்கள் மூட காரணமான வணிக சிலிண்டர் விலை உயர்வை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘5 நாட்கள் முன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
நான்கு நாட்களுக்கு பிறகு விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் சென்று கொண்டிருந்தால் அடுத்த சில நாட்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்த்தப்படும். வாழ முடியாத நெருக்கடிக்கு மக்களை பாஜக அரசு தள்ளி உள்ளது.
பெட்ரோல், டீசல், எரிவாயு என்பது அத்தியாவசியமான பொருள். இதை அனைத்து மக்களுக்கும் குறைவான விலையிலும், தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தனது உரையில், ‘‘பெட்ரோல், டீசல் எரிவாயு விலை உயர்வுக்கு முழுக்க முழுக்க மத்திய அரசும், பிரதமரும்தான் பொறுப்பு. இந்த நெருக்கடிக்கு மூல காரணம் அமெரிக்காவும், இஸ்ரேலும்தான்.
நம் நட்பு நாடு ஈரான் தங்கு தடை இல்லாமல் எரிவாயு கொடுத்து கொண்டிருந்தார்கள். அதன் அதிபரை கொன்று விட்டார்கள். செல்வந்தர்கள் தான் தேசவளங்களை கொள்ளை அடிக்கிறார்கள். பிரதமரின் அறிவுரை வேண்டுகோள் எல்லாம் அந்த பக்கம் திரும்ப வேண்டும். உழைக்கிற மக்கள் பக்கம் அல்ல’’ என்று கூறினர்.





