திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்யவும், போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அமெரிக்காவில் நடந்த உலகத் தமிழ் அமைப்புகளின் ஆண்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, நேற்று சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள், அரசு நிறுவனங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆய்வு என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. ஆய்வு மேற்கொண்டதில் அமைச்சர் (கீர்த்தனா) மரபு மீறவில்லை.
அமைச்சர் தனது ஆய்வை வீடியோவாக எடுக்கவில்லை. மற்ற ஊடகங்கள் எடுத்த காணொலி தான் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் தமிழ் வழிக் கல்வியில் படித்து, ஆங்கிலத் திறமை பெற்றவராக உள்ளார்.
மரபுப்படி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டதை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.`கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் 50 நாட்கள் ஆட்சியில் நடக்கவில்லை. எங்களுடைய 5 ஆண்டுக்கால ஆட்சியில் உருவாக்கப்பட்டது’ என்று கூறுகின்றனர்.
அதேபோல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, 50 நாட்களில் உருவானது அல்ல; 5 ஆண்டுகளில் ஏற்பட்டது தான். எங்கும் இருக்கும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 3-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டணியில் உள்ள கட்சிகளை, நண்பர்களாக, தோழர்களாக பார்க்கக்கூடிய கட்சி தவெக. இதுதான் ஜனநாயகம். கூட்டணி கட்சிகளை தங்களுக்கு கீழாக பார்க்கும், எந்தவித நெருக்கடியும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு கொடுக்க மாட்டோம்.
திருமாவளவனின் பேச்சை ஜனநாயகத்தின் வெளிப்பாடாக பார்க்கிறோம். தனியார் பள்ளிகள் ஒவ்வொரு சான்றிதழுக்கும் ரூ.25 லட்சம், ரூ.40 லட்சம் பணம் கொடுத்து வந்த ஊழலை தடுத்து நிறுத்தியிருக்கிறோம்.
பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள்தான் எனது கண்கள். நான் போட்டமுதல் கையெழுத்து, அரசு பள்ளிகளில் மாணவிகளின் கழிப்பறைகள் மூடக்கூடிய தாழ்ப்பாள்களுடன் இருக்க வேண்டும் என்பதுதான். அரசு பள்ளியின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.





