மின் தடையை கண்டித்து நள்ளிரவில் ஈசிஆரில் மறியல்

தொடர் மின்வெட்டைக் கண்​டித்து நீலாங்​கரை​யில் பொது​மக்​கள் நள்​ளிர​வில் சாலை மறியல் போராட்​டம் நடத்​தினர். சென்னை கிழக்கு கடற்​கரைச் சாலை​யில் (ஈசிஆர்) உள்ள நீலாங்​கரை பாண்​டியன் சாலை​யில் சுமார் 400 வீடு​கள் உள்​ளன.

இந்த பகு​தி​யில் சில நாட்​களாக தொடர்ந்து இரவு நேரங்​களில் மின்​தடை ஏற்​பட்டு வந்​துள்​ளது. இதுகுறித்து அந்​தப் பகுதி மக்​கள் மின்​வாரிய அதி​காரி​களிடம் புகார் கொடுத்​தனர்.

ஆனால் மின்​வாரிய அதி​காரி​கள் உரிய நடவடிக்கை எடுக்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது. இதனால் அந்த பகு​தி​யில் இரவு நேர மின்​தடை தொடர்ந்​துள்​ளது. நேற்று முன்​தினம் நள்​ளிர​வும் வழக்​கம்​போல் மின்​தடை ஏற்​பட்​டுள்​ளது.

இதனால் ஆத்​திரமடைந்த அப்​பகுதி மக்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் கிழக்கு கடற்​கரைச் சாலை​யில் திரண்​டனர். திடீரென சாலை​யில் அமர்ந்து மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தகவலறிந்து நீலாங்​கரை போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து பொது​மக்​களிடம் சமா​தான பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டனர். ஆனால் மக்​கள் போராட்​டத்​தைக் கைவிட மறுத்துசாலை மறியலைத் தொடர்ந்​தனர்.

இதற்​கிடையே சோழிங்​கநல்​லூர் தொகுதி தவெக எம்​எல்ஏ சரவண​மூர்த்​தி, மின்​வாரிய அதி​காரி​கள் அங்கு விரைந்து வந்து பொது​ மக்​களிடம் சமாதானம் பேசி​னார். நீண்ட நேரம் நடந்த சமா​தான பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு, மக்​கள் போராட்​டத்தைக்கைவிட்டு கலைந்து சென்​றனர்.

இந்த போராட்​டம் காரண​மாக அந்​தப் பகு​தி​யில் சில மணி நேரம் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. போராட்​டம் நடை​பெற்ற பகு​தி​யின் அரு​கே​தான் தமிழக முதல்​வர் விஜய்​​யின்​ வீடு உள்​ளது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.