சாம்பலில் எழுந்த சொற்கள்!

தீயின் நாக்குகள்
நூல்களின் இதயத்தை நக்கிய இரவில்,
கருகியது காகிதமல்ல
ஒரு இனத்தின் நினைவுகள்.

அலமாரிகளில் உறங்கிய வரலாறு,
சாம்பலாய் காற்றில் கலந்தது;
ஆனால் அந்தச் சாம்பலின் துகள்களில்கூட
தமிழின் உயிர் எழுத்துகள் வாழ்ந்தன.

எரிந்த பக்கங்களின் ஓரங்களில்
இன்னும் கேட்கிறது ஓர் அழுகுரல்;
“என்னை வாசித்த தலைமுறைகளை
யார் எரிக்க முடியும்?” என்று.

தீ வென்றதாக எண்ணியவர்கள்
ஒரு உண்மையை அறியவில்லை
புத்தகங்களை எரிக்கலாம்,
ஆனால் சிந்தனைகளை அல்ல.

இன்று,
சாம்பலுக்குள் புதைந்த ஒவ்வொரு சொல்லும்
விதையாக முளைக்கிறது;
நினைவுகளின் நிலத்தில்
மீண்டும் ஒரு நூலகமாக வளர்கிறது.