பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தாம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னால் வெளிநாட்டுச் சதி இருப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இதற்கு வலுச் சேர்க்கும் விதமாக, ரகசிய அரசு தூதரக ஆவணம் ஒன்று தற்போது கசிந்துள்ளது பாகிஸ்தானில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
‘சைபர்’ என்று அழைக்கப்படும் இந்த ஆவணம், மார்ச் 2022-ல் அமெரிக்காவுக்கான அப்போதைய பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கான் மற்றும் அமெரிக்க தூதர் டொனால்டு லூ ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உரையாடலை விவரிக்கிறது. இந்த உரையாடல்தான் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ப்புக்கும், அவரது தற்போதைய சிறைவாசத்திற்கும் வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு ஊடகமான டிராப் சைட் , ‘கேபிள் ஐ-0678′ (cable I-0678) என அடையாளம் கொண்ட இந்த அசல் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பில் பாகிஸ்தான் நடுநிலை வகித்ததால் ஜோ பைடன் அதிருப்தியடைந்தார். இதையடுத்து தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மூலம், மார்ச் 7, 2022-ல் நடைபெற்ற சந்திப்பின்போது, இம்ரான் கானைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குமாறு வற்புறுத்தியுள்ளதை அந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராகத் தனது ராணுவத் தளங்களை அமெரிக்கப் படைகள் பயன்படுத்த இம்ரான் கான் அனுமதிக்காததும் அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





