அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் தனது சமூக வலைதளமான “ட்ரூத் சோஷியல்” தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் எனக்கு உறுதியளித்துள்ளனர். அவர்களின் வார்த்தையை நான் நம்புகிறேன்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனா அல்லது ரஷ்யா ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அது அந்த நாடுகளின் நலன்களுக்கு சாதகமாக இருக்காது எனவும் அவர் எச்சரித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனா மற்றும் ரஷ்யா மறைமுகமாக ஈரானுக்கு இராணுவ உதவிகளை வழங்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியிலேயே டிரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையும் உயர்வடைந்துள்ளது.
இடைக்கால போர்நிறுத்த உடன்பாட்டை மீறி ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு அமெரிக்க இராணுவம் கடந்த சில வாரங்களாக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.




