அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, சீன ஜனாதிபதி சி ஜின் பிங் ( Xi Jinping ), ஈரானுக்கு ஆயுதங்களை வழங்காதிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிரம்ப் தனது “Truth” சமூக வலைதளப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். அதில், ஹோர்மூஸ் நீரிணையை நிரந்தரமாக திறந்துவைப்பது குறித்து சீனா மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“ஹோர்மூஸ் நீரிணையை நிரந்தரமாக திறந்துவைப்பது குறித்து சீனா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. நான் இதை சீனாவுக்காகவும், உலகத்திற்காகவும் செய்கிறேன். இத்தகைய நிலை இனி ஒருபோதும் ஏற்படாது. ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பப்போவதில்லை என்று சீனா ஒப்புக்கொண்டுள்ளது,” என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், “இன்னும் சில வாரங்களில் நான் சீனாவிற்கு செல்லும்போது, சீன ஜனாதிபதி சி ஜின் பிங் எனக்கு அன்பான வரவேற்பளிப்பார். நாங்கள் அறிவார்ந்த முறையில் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, “சண்டையை விட அமைதியான தீர்வு மிகச் சிறந்தது. எனினும், தேவைப்பட்டால் அமெரிக்கா போராடுவதிலும் முன்னிலையில் இருக்கும்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த முன்னேற்றம், ஈரான் தொடர்பான சர்வதேச பதற்றத்தை குறைக்கும் முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.





