அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், கொப் கவுண்டியில், கூகுள் நிறுவனத்தின் சிரேஷ்ட பொறியியல் முகாமையாளரதாகப் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 57 வயதுடைய ஷீட்டல் வர்சீனியன் என்றப் பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறினால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தம்பதியினரின் 23 வயதுடைய மகனும் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீட்டின் வெளிப்புறத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் இருந்த மகனை மீட்டுள்ளனர். தொடர்ந்து வீட்டிற்குள் நடத்திய சோதனையில், பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் அந்த பெண் கண்டெடுக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொலையாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணின் கணவரைப் பொலிஸார் அந்த வீட்டிலேயே வைத்து எவ்வித எதிர்ப்புமின்றி கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலைக் குற்றம், கொடூர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியமை மற்றும் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அவர் பிணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தப் பெண் தொழில்நுட்பத் துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமிக்க ஒரு சிறந்த தலைவராக மதிக்கப்பட்டவர் ஆவார்:அவர் ‘ஜோர்ஜியா டெக்’பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த அவர், அதற்கு முன்னதாக ‘தி ஹோம் டிப்போ’ போன்ற முன்னணி நிறுவனங்களின் பிரதான டிஜிட்டல் தொழில்நுட்ப திட்டங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதில் தீவிரமாகச் செயல்பட்ட அவர், ஜோர்ஜியா டெக் பல்கலைக்கழகத்தின் கணினியியல் கல்லூரியின் ஆலோசனைக் குழுவிலும் அங்கத்துவ வகித்துள்ளார்.





