ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குமாமோட்டோ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியதிர்ச்சியால் வீதிகள் மற்றும் பாலங்களில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதுடன், பல கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்துள்ளன. இந்த அனர்த்தத்தில் குறைந்தது 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சி, பூமியதிர்ச்சியின் முழுமையான பாதிப்புகள் தொடர்பில் அதிகாரிகள் தீவிரமாக மதிப்பீடு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
என்எச்கே செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ஒரு வைத்தியசாலையில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பூமியதிர்ச்சி ஏற்பட்ட நேரத்தில் அதிவேக புல்லட் புகையிரதத்தில் பயணித்த சிலரும் காயமடைந்துள்ளனர்.
கியூஷு எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் தரவுகளின்படி, பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து சுமார் 40,000 வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், சில பகுதிகளில் தீ விபத்துகளும் பதிவாகியுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க குமாமோட்டோ கோட்டையின் சுவர்களின் சில பகுதிகளும் இடிந்து விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதான வீதிகளில் ஏற்பட்ட பாரிய பிளவுகள் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சரக்கு புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் புல்லட் புகையிரத சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, குமாமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டுள்ளதால் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டதுடன், சில சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகின் முன்னணி குறைக்கடத்தி (Semiconductor) உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது தொழிற்சாலைகளில் பணியாற்றிய ஊழியர்களை உடனடியாக வெளியேற்றியுள்ளன.
மேலும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1,50,000-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து ஆரம்பத்தில் ஒரு மீற்றர் உயரம் வரை சுனாமி அலைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
எதிர்வரும் ஒரு வார காலப்பகுதியில் மேலும் பலத்த பிந்தைய அதிர்வுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





