போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பு: ஈரான்–அமெரிக்கா இடையே 2 ஆம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் பின்னணியில், இரு நாடுகளும் அதனை மேலும் நீட்டிக்கும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத் நகரில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, அணுசக்தி திட்டம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை தொடர்பான விவகாரங்களில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

இதன் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானில் உள்ள முக்கிய துறைமுகங்களை முற்றுகையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்திருந்தார். அதேசமயம், ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில், இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன. இன்று 16 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தை மீண்டும் இஸ்லாமாபாத்திலேயே நடைபெற உள்ளது.

இந்நிலையில், 2 ஆவது கட்ட பேச்சுவார்த்தைக்கு முன் அமெரிக்கா இரண்டு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது, ஹோர்மூஸ் நீரிணையை எந்தத் தடையும் இன்றி முழுமையாகத் திறக்க வேண்டும் மற்றையது அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய, ஈரான் தூதுக் குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

மேலும், குறிப்பாக ஈரானின் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படையின் முழு அதிகாரத்துடன் அந்தத் தூதுக்குழு செயல்பட வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து, அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எட்டுவதற்காக கூடுதல் நேரம் தேவைப்படுவதால், தற்போது அமுலில் உள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் வாய்ப்பை ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் பரிசீலித்து வருகின்றன.

இன்றைய பேச்சுவார்த்தை மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பதற்ற நிலையை குறைக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.