யேர்மனி டோர்ட்முண்ட் (னுழசவஅரனெ) நகரில் 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போரில் இதுவரை உறுதிப்படுத்தப்படாத 25 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமான வணக்க நிகழ்வில் முதலில் மாவீரர் திருவுருவப் படங்கள் ஒவ்வொன்றாக மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டு உரிய இடங்களில் வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஜேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறி ரவீந்திரநாதன் ஏற்றி வைக்க, தேசியக்கொடியினை துணைப் பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஏற்றி வைத்தார்.
மாவீரர்களுக்கு மதிப்பளிக்கும் முகமாக தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து மாவீரர்களின் பொதுச்சுடருக்கு தேசியச் செயற்பாட்டாளர் திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்கள் சுடரொளி ஏற்ற, அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு. திருநீலவன் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து மாவீரர் திருவுருவப் படங்களுக்கு உரித்துடையோரும் துறைசார் செயற்பாட்டாளர்களும் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தனர்.
ஒவ்வொரு மாவீரர்களைப் பற்றியும் சுருக்கமாக விவரிக்கப்பட்டது. பின்பு அகவணக்கத்துடன் உறுதி எடுக்கப்பட்டு எமது தாரகமந்திரமும் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து மக்கள் அனைவரும் சுடரேற்றி மலர் வணக்கம் செய்தனர். மேலும் தாயக நலன் அமைப்புப் பொறுப்பாளர் திரு. இராயன் அவர்களும், தேசியச் செயற்பாட்டாளர் திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்களும் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர். இறுதியாக மாவீரர் திருவுருவப் படங்களும் தேசியக்கொடியும் உரித்துடையோரிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வு அனைத்துலகச் செயலகத்தின் ஏற்பாட்டில் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் பணிமனையால் நடாத்தப்பட்டது. தாயக நினைவுகளை நினைவு கூரும் நிகழ்வாக நிகழ்வுகள் யாவும் இடம்பெற்று இருந்தமை பலரின் விழிகளில் விழிநீர் சொரிந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பின்பு தேசியக்கொடி கையேந்தப்பட்டு நிகழ்வுகள் யாவும் நிறைவிற்கு வந்தது.





