உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை – “Tourism as Soft Power and Diplomatic Capital” உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதமர் உரையாற்றினார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டங்களுக்கு இணையாக, ஜனவரி 20ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரிலுள்ள பிஸ் புய்ன் (Piz Buin) பகுதியில் அமைந்துள்ள Euronews மையத்தில் “Tourism as Soft Power and Diplomatic Capital” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில், சுற்றுலாப் பயணங்கள் மற்றும் மக்களுக்கிடையிலான நேரடி தொடர்புகள் ஊடாக சர்வதேச நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சுற்றுலாத்துறை எவ்வாறு ஒரு மூலோபாய இராஜதந்திரக் கருவியாக செயல்படுகிறது என்பதைக் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதில் துருக்கிய அரசுகளின் அமைப்பின் பொதுச் செயலாளர் குபன் ஓமிராலியேவ் மற்றும் சவூதி அரேபியாவின் Aseer Investment நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மெஷாரி அல்நாஹர் ஆகியோரும் பங்கேற்றனர்.
உலகளாவிய போக்குகள் குறித்து உரையாற்றிய பிரதமர், மோதல்கள் நிறைந்த இன்றைய உலகச் சூழலில் இலங்கை ஒரு நம்பிக்கை, மீட்சி மற்றும் மீளெழும் திறனுக்கான எடுத்துக்காட்டாக திகழ்வதாகக் குறிப்பிட்டார். காலநிலை மாற்றச் சவால்கள், புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் சீரற்ற பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு மத்தியில் மாறிவரும் உலகச் சூழலில், சுற்றுலாத்துறை எவ்வாறு முக்கிய பங்காற்ற முடியும் என்பதை இலங்கை நிரூபித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாத்துறை என்பது வெறும் பொருளாதாரத் துறை மட்டுமல்ல; அது வாழ்வாதாரங்களை ஆதரிக்கும், உறவுகளைக் கட்டியெழுப்பும் மற்றும் மக்களை இணைக்கும் ஒரு முக்கியமான இராஜதந்திரப் பாலமாகும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இலங்கையின் சமீபத்திய அனுபவங்களை எடுத்துரைத்த பிரதமர், ‘டித்வா’ சூறாவளி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் சுற்றுலாத்துறை வலுவாக மீட்சியடைந்ததை சுட்டிக்காட்டினார்.
வெளிப்படைத்தன்மைமிக்க நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட மூலோபாய ரீதியான ஒத்துழைப்புகள், சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையை நிலைநாட்ட உதவியதாகவும், சவாலான சூழ்நிலைகளிலும் சாதனை அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகையை ஈர்க்க வழிவகுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
காலநிலை நேயமான பசுமைச் சுற்றுலாத்துறைக்கு உகந்த உட்கட்டமைப்புகளின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், சுற்றுலாத்துறையில் நீண்டகால முதலீடுகளை இலங்கை வரவேற்கும் என்றும் கூறினார்.
உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக சுற்றுலாத்துறை விளங்குவதாக சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக பெண்கள் மற்றும் நலிவடைந்த சமூகத்தினருக்கு சம வாய்ப்புகளை உறுதிப்படுத்த அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகள் அவசியம் எனவும் தெரிவித்தார்.










