அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி : பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் சூழல்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை சுமார் 15 மணித்தியாலங்கள் நீடித்தபோதிலும், எந்தத் தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல்கள் 06 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 07ஆம் திகதி 02 வாரங்களுக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பதற்றம் தற்காலிகமாக குறைந்திருந்தது.

இந்த சூழலில், மத்தியஸ்தமாக பாகிஸ்தான் முன்வந்து, அமைதி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்தது. இதனைத் தொடர்ந்து, ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் தலைமையிலான உயர்மட்ட குழு இஸ்லாமாபாத்திற்கு சென்றது. இதில் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் சையித் அப்பாஸ் அர்காஷ், தேசிய பாதுகாப்பு ஆணைக்குழு செயலாளர் அலி அக்பர் ஹம்தான், மத்திய வங்கி ஆளுநர் அப்தோல்நசர் ஹெம்மாட்டி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே. டி. வான்ஸ் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இஸ்லாமபாத் நகரை சென்றடைந்தது.

பாதுகாப்பு காரணங்களால், இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதால், முக்கிய வீதிகள் வெறிச்சோடியிருந்தன.

இந்த முக்கிய பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்திலுள்ள செரீனா ஹோட்டலில் நேற்று  சனிக்கிழமை (11)  மதியம் 1 மணியளவில் ஆரம்பமாகி, இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை 3.40 மணி வரை நீடித்தது. பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரும் எழுத்து வடிவிலான ஆவணங்களை பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தைக்கு முன், ஈரான் அதிகாரிகள் பாகிஸ்தான் தரப்பினருடன் தனிப்பட்ட கலந்துரையாடலும் நடத்தினர்.

பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த முகமது பாகர் காலிபாஃப்,

“அமெரிக்காவுடன் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் தோல்வியிலும், வாக்குறுதி மீறல்களிலும் முடிவடைகின்றன. நல்லெண்ணம் இருந்தாலும், நம்பிக்கை இல்லை” என தெரிவித்துள்ளார்.

மற்றுபுறம்ஜே. டி. வான்ஸ்  ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில், “இரு தரப்பும் விரிவான விவாதங்களில் ஈடுபட்டது நல்ல விஷயம். ஆனால், எந்த ஒப்பந்தமும் எட்டப்படாதது வருத்தமளிக்கிறது. இது அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல, ஈரானுக்கும் பாதகமானது” என்றார்.

மேலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவோ, அதற்கான திறனை வைத்திருக்கவோ கூடாது என்பதே அமெரிக்காவின் முக்கிய நிபந்தனை எனவும், அதில் உறுதி கிடைக்காததே பேச்சுவார்த்தை தோல்விக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தை, 06 வாரங்களாக நீடித்து வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக கருதப்பட்ட நிலையில், தற்போது அது தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனால், மேற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.