நிலக்கரி மாேசடி தொடர்பில் வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்து அமைச்சரை பாதுகாத்தாலும் நிலக்கரி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்துக்கு நிறுத்துவோம். அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிலக்கரி கொள்வனவின்போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக நாங்கள் ஆரம்பித்தில் இருந்து தெரிவித்து வந்தோம். என்றாலும் அரசாங்கம் அதனை மறுத்துவந்தது. அதனால் விடயத்துக்கு பொறுப்பான மின் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தன அதன் பிரகாரம் நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால், அரசாங்க்துக்கு எதிராக எந்த பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதனை அரசாங்கம் தோற்கடித்துவிடும் என்பது எமக்கு தெரியும். என்றாலும் இந்த நிலக்கரி கொள்வனவில் பாரிய மோசடியில் இடம்பெற்றிருப்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த முடியுமாகி இருந்ததுடன் ஊழல் மோசடிகளுக்கு இடமளிப்பதில்லை என ஆட்சிக்கு வந்த இவர்கள், தற்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்து, மோசடிக்கு ஆதரவளித்திக்கிறார்கள் என்பதை மக்கள் கண்டுகொண்டுள்ளனர்.
மேலும் அரசாங்கம் அவர்களுக்கு இருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு நம்பிக்கையிலா பிரேரணையை தோற்கடித்ததன் மூலம் இந்த பிரச்சினைை முடிவடையப்போவதில்லை. நிலக்கரி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலக்கரி கொள்வனவு மோசடி, அமைச்சர் குமார ஜயகொடியினால் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையல்ல. இதற்கு ஒத்துழைப்பு, ஆதரவு வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட முழு அமைச்சரவையும் இதறகு பொறுப்புக்கூற வேண்டும்.
ஏனெனில் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற பாரிய மோசடியாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவால் நாட்டுக்கு 22 பில்லியன் ரூபா நேரடியாக நட்டம் ஏற்பட்டுள்ளபோதும் இதன் மறைமுக நட்டம் தொடர்பில் இன்னும் கணக்கிடப்படவில்லை. அதேநேரம் நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெற்றிருப்பதை அரச கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
எனவே அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு, மோசடி காரர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தாலும் நிலக்கரி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்துவோம் என்றார்.





