அவசரகால பிரகடனத்தைத் தொடர்ந்து நீடிப்பது குறித்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கோரப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு எதிராக 27 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆக இருக்கையில், வெறுமனே 27 பேர் மாத்திரமே அதற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அவ்வாறெனில் இந்த முக்கிய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவசரகாலப் பிரகடனம் குறித்து பாராளுமன்றத்துக்கு வெளியே எதிர்ப்பை வெளிக்காட்டுவதால் என்ன பயன்? என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் கீழான அவசரகால அமுலாக்கத்தை நீடிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கடந்த வாரம் வியாழக்கிழமை (10) 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து கடும் கண்டனம் வெளியிட்ட சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், ‘தித்வா’ சூறாவளி போன்ற இயற்கைப் பேரனர்த்த சூழ்நிலையில் அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய அவசியமில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக கடந்தகால அரசாங்கங்கள் நியாயமற்ற காரணங்களைக்கூறி, மக்கள்மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகிக்கும் வகையில் அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்திய சம்பவங்களை நினைவுகூர்ந்த அவர், கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களின் பாதையிலேயே பயணிப்பதாக விசனம் வெளியிட்டார்.
அதேபோன்று ‘ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம் அவசரகால பிரகடனத்தைத் தொடர்ந்து நீடிப்பது குறித்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கோரப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு எதிராக 27 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆக இருக்கையில், வெறுமனே 27 பேர் மாத்திரமே அதற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
அவ்வாறெனில் இந்த முக்கிய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவசரகாலப் பிரகடனம் குறித்து பாராளுமன்றத்துக்கு வெளியே எதிர்ப்பை வெளிக்காட்டுவதால் என்ன பயன்?’ என்றும் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவசரகாலச்சட்டத்தை பொதுமக்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கான ஆயுதமாக ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை அரசாங்கம் மனதிலிருத்திச் செயற்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.





