காதலரைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்மணியின் பரிதாப நிலை

இளம் வயதில் தான் காதலித்த நபருடன் வாழ்வதற்காக அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவர், அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

காதலரைத் தேடி…

பிரான்ஸ் நாட்டவரான மேரி தெரேஸ், 1950களில் நேட்டோ ராணுவத் தளம் ஒன்றில் பணிபுரியும்போது பில்லி என்னும் அமெரிக்கரை சந்தித்துள்ளார்.

இருவரும் காதலிக்கத் துவங்கிய நிலையில், 1960களில் அமெரிக்க ராணுவம் நாடு திரும்பவேண்டிய நிலை உருவாக, பில்லி அமெரிக்கா திரும்ப நேர்ந்துள்ளது. மேரியும் பில்லியும் வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்துகொண்டு தத்தம் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த நிலையில், 2010ஆம் ஆண்டு, சமூக ஊடகம் வாயிலாக மீண்டும் இருவரும் சந்தித்துள்ளார்கள்.2022ஆம் ஆண்டு, இருவரது துணைவர்களும் மரணமடைந்தபின், பில்லியுடன் வாழ்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் மேரி.

ஆனால், மேரி கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், பில்லி மரணமடைந்துவிட்டார்.

பில்லி இறந்ததும் அவரது சொத்துக்கள் குறித்து மேரிக்கும் பில்லியின் மகனுக்கும் பிரச்சினை உருவாக, மேரியை மிரட்டிய பில்லியின் மகன், மேரி வீட்டுக்குச் செல்லும் தண்ணீர், மின்சாரம், இண்டர்நெட் என அனைத்து இணைப்புகளையும் துண்டித்துள்ளார்.

மேரி வழக்குத் தொடர, அவரது வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே, இம்மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் மேரியை கைது செய்துவிட்டார்கள்.

பல நாட்களாக மேரி எங்கிருக்கிறார் என தெரியாமல் அவரது பிள்ளைகள் தவிக்க, பிறகு பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் சென்று மேரியை சந்தித்துள்ளார்கள்.

தன் தாயை அமெரிக்க அதிகாரிகள் 70 பேருடன் அடைத்துவைத்துள்ளதாகவும், பயங்கர குற்றவாளியைப் போல நடத்துவதாகவும் தெரிவித்துள்ள மேரியின் மகன்களில் ஒருவர், உடல் நல பாதிப்புகள் கொண்ட தங்கள் தாயை எப்படியாவது பிரான்சுக்கு கொண்டுவருவதே தங்களுக்கு இப்போது முன்னுரிமையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.